பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


திருவாசகமும் திருக்கோவையாரும் இயற்றி யருளிய மாணிக்க வாசகர் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இருந்தமை உணரற்பாலது. அவ்வடிகளின் நூல்கள் இரண்டும் எட்டாந் திருமுறையாக உள்ளன.

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் நம்மாழ்வாரது திருவாய் மொழிப் பிரபந்தம், பட்டினத்தடிகளின் பிரபந்தங்கள், பாரத வெண்பா, நந்திக்கலம்பகம், ஔவையாருடைய நீதி நூல்கள் ஆகியவை இயற்றப் பெற்றன. அவற்றுள், திருவாய் மொழி நாலாயிரப் பிரபந்தத்தில் உளது; பட்டினத்தடிகளின் பிரபந்தங்கள் பதினோராந் திருமுறையில் தொகுக்கப் பட்டிருக்கின்றன; நந்திக்கலம்பகம், தெள்ளாறெறிந்த நந்திவர்மன் என்ற பல்லவவேந்தன் மீது பாடப்பெற்ற நூலாகும். அதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இப்போது தமிழிலுள்ள கலம்பக நூல்களுள் அதுவே பழமை வாய்ந்தது. அப்பல்லவ அரசன் ஆதரவினால் தோன்றிய பாரத வெண்பாவின் ஆசிரியர்யாவர் என்பதும் புலப்படவில்லை. அந்நூலில் சில பருவங்களே இக்காலத்தில் உள்ளன. நம்பியாண்டார் நம்பியின் பிரபந்தங்களுள் சிலவும் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றியவையாகும்.

சோழர் காலம்

இது கி.பி. 900 முதல் கி.பி. 1279 முடியச் சோழர் பேரரசு நடைபெற்ற காலம் ஆகும். இக்காலப் பகுதியில் சிறந்த தமிழ் நூல்கள் தோன்றியுள்ளன எனலாம். கி.பி. பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியும் சில பிரபந்தங்களும், திருத்தக்க தேவரால் இயற்றப்பெற்றதும் ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாயதும் ஆகிய சீவகசிந்தாமணியும், தோலா மொழித் தேவரது சூளாமணியும் தோன்றியிருத்தல் வேண்டும். அந்நூற்றாண்டினிடையிலே, முதல் கண்டராதித்த சோழரது திருவிசைப் பாப்பதிகமும் கல்லாடனாரது கல்லாடமும், அந்நூற்றாண்டின் பிற்பகுதியில் கம்பரது இராமயணமும், அமித சாகரருடைய செய்யுள் இலக்கண