பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

191


நூல்களாகிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய நூல்களும் இயற்றப்பெற்றன வாதல் வேண்டும். திவாகரம், பிங்கலந்தை என்ற நிகண்டுகளும் அந்நூற்றாண்டில் தோன்றியவை என்பது அறிஞர் சிலருடைய கருத்தாகும்.

கி.பி. பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியில் கருவூர்த் தேவருடைய திருவிசைப்பாப் பதிகங்களும், இராசராச விசயம், இராசராசேசுவர நாடகமும் இயற்றப் பெற்றுள்ளன. பின்னிரண்டு நூல்களும் முறையே முதல் இராசராச சோழனையும் அவன் தஞ்சைமாநகரில் எடுப்பித்த பெரிய கோயிலையும் பற்றிய வரலாறுகளாக இருத்தல் வேண்டும். அவை இக்காலத்தில் கிடைக்கவில்லை. பொன்பற்றிக் காவலன் புத்தமித்திரனுடைய வீரசோழியம் என்ற இலக்கண நூல் அந்நூற்றாண்டின் பிற்பகுதியில் வீரராசேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் இயற்றப் பெற்றதாகும். தமிழிலுள்ள பிற்கால இலக்கண நூல்களும் ஐந்திலக்கணமும் ஒருங்கே யமைந்த பழைய நூல் அதுவே எனலாம்.

கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதற் குலோத்துங்க சோழன் மீது சயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணியும், அந்நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஒட்டக்கூத்தர் பாடிய விக்கிரம சோழன் உலா, கலிங்கப்பரணி[1] அரும்பைத் தொள்ளாயிரம், குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ், குலோத்துங்க சோழன் உலா, இராசராசசோழன் உலா, தக்கயாகப்பரணி ஆகிய நூல்களும் வச்சத் தொள்ளாயிரம், கண்டனலங்காரம், தண்டியலங்காரம் என்ற நூல்களும், அந்நூற்றாண்டின் இறுதியில் சேக்கிழாரது பெரியபுராணம், பவணந்தி முனிவரது நன்னூல், குணவீர பண்டிதருடைய நேமிநாதம், வச்சணந்திமாலை, வெண்பாப் பாட்டியல், நாற்கவிராச நம்பியின் அகப்பொருள் விளக்கம் ஆகிய நூல்களும் இயற்றப்பட்டுள்ளன. அவற்றுள், கலிங்கத்துப் பரணி, அரும்பைத் தொள்ளாயிரம், கண்டனலங்காரம், வச்சத் தொள்ளயிரம் என்பன இப்போது கிடைக்க வில்லை. இந்நாளில்


  1. இப்பரணி விக்கிரம சோழன் தென் கலிங்கத்தை வென்றமை பற்றி ஒட்டக்கூத்தரால் பாடப் பெற்றது.