பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


முதலிய வரிசைகள் அளித்துப் பாராட்டிய போது, இவர் அவற்றைப் பெறுவதற்குத் தமக்குத் தகுதி இல்லை என்றுரைத்துத் தம் பணிவுடைமையைத் தெரிவித்தனர்.

இப்புலவர் இரண்டாங் குலோத்துங்கசோழன் (ஆ.கா. 1133-1150) மீது தாம் கொண்ட அன்பினால் பிள்ளைத் தமிழ் ஒன்றும், உலா ஒன்றும், பாடியிருப்பதோடு அவனுக்குத் தமிழாசிரியராக அமர்ந்து, அவனைச் செந்தமிழ்ப் புலமை வாய்ந்த வேந்தனாக ஆக்கியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் அம்மன்னனது பேராதரவிற்குரியவராகிச் செல்வம், புகழ், மதிப்பு ஆகியவற்றை மிகுதியாகப் பெற்று, எத்தகைய கவலையுமின்றி இனிது வாழ்ந்து வந்தனர் எனலாம். ஒருமுறை அவ்வரசர் பெருமான், 'நித்தநவம் பாடுங் கவிப்பெருமானொட்டக் கூத்தன் பதாம் புயத்தைச் சூடுங் குலோத்துங்க சோழனென் றேயெனைச் சொல்லுவரே’ என்று தன் ஆசிரியராகிய இக்கவிஞர் கோமானைப் புகழ்ந்து பாடியிருத்தல் அறியத்தக்கது.

இவர் இரண்டாம் இராசராச சோழன் (ஆ.கா. 1146 - 1163) மீது ஓர் உலாவும், அவனைச் சார்த்துவகையால் சிறப்பித்துத் தக்கயாகப்பரணி என்ற ஒரு நூலும் இயற்றியுள்ளனர். இவர் இராசராச சோழனுலாவைப் பாடி அரங்கேற்றியபோது அவ்வரசன் அந்நூலிலுள்ள ஒவ்வொரு கண்ணிக்கும் ஆயிரம் பொன் வீதம் இவருக்குப் பரிசில் வழங்கினான் என்று தெரிகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் ரெயில் நிலையத்திற்கு அணித்தாக அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள கூத்தனூர்க் கலைமகள் கோயிலில் காணப்படும் கல்வெட்டொன்றால், அவ்வூர் அவ்வேந்தர் மூவருள் ஒருவனால் இவருக்குப் புலவர் முற்றூட்டாக அளிக்கப் பட்டிருத்தல் வேண்டும் என்பது வெளியாகின்றது. தன் ஆசிரியர் பெயரை அவ்வூர் உடையதாயிருத்தலாலும் தான் இவர்பால் கொண்ட அன்பின் பெருக்கினாலும் இரண்டாங் குலோத்துங்க சோழனே கூத்தனூரை இப்புலவர் பெருமானுக்கு வழங்கியிருத்தல் வேண்டுமென்று எண்ணுவதற்கு இடம் உண்டு. அவ்வூரில் கலைமகளுக்கு ஒரு கோயில் அமைத்து இவர் வழிபாடு புரிந்துவந்தனர்.