பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

199


அடிகளையுடையது; இந்நூலின் இறுதியில் வெண்பா ஒன்றும் உளது.

கலிங்கப் பரணி மேலே குறிப்பிட்ட விக்கிரம சோழன் தென்கலிங்க மன்னனாகிய தெலுங்கு வீமனைப் போரில் வென்ற வீரச்செயலைப் பாராட்டிப் பாடிய பரணி நூலாகும். இது இக்காலத்தில் கிடைக்கவில்லை. இந்நூல் ஒன்று இருந்த செய்தி, தக்கயாகப் பரணியாலும் அதன் உரையாலும் தெளிவாகப் புலப்படுவதாயிற்று. சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லாரால் மேற்கோளாக எடுத்துக் காட்டப்பட்ட பரணித் தாழிசைகளுள் சில இந்நூலிலிருந்தவை என்று கருதப்படு கின்றன.

அரும்பைத் தொள்ளாயிரம் விக்கிரமசோழன் படைத் தலைவனும் தில்லையம்பதி திருவதிகை வீரட்டானம் முதலான ஊர்களிலுள்ள திருக்கோயில்களுக்குப் பல திருப்பணிகள் புரிந்தவனுமாகிய அரும்பாக்கிழான் மணவிற்கூத்தன் காலிங்க ராயன் மீது இயற்றிய ஒரு நூல். இது தொள்ளாயிரம் பாடல்கள் உடையதாயிருத்தல் வேண்டும். இந்நூல் இந்நாளில் கிடைக்கவில்லை.

குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ் விக்கிரம சோழன் மகனும் ஒட்டக்கூத்தருடைய மாணவனுமாகிய இரண்டாங் குலோத்துங்க சோழன் மீது பாடிய பிள்ளைத்தமிழ். இது சொற்சுவை பொருட்சுவைகளிற் சிறந்த ஓர் அரிய நூல். இதில் சோழமன்னர் சிலருடைய வீரச் செயல்களும் இரண்டாம் குலோத்துங்க சோழனுடைய பல சிறந்த குணங்களும் கூறப் பட்டிருக்கின்றன. இது நூற்று மூன்று பாடல்களை உடையது. இடையில் சில பாடல்கள் சிதைந்துள்ளன.

குலோத்துங்க சோழன் உலா இரண்டாங் குலோத்துங்க சோழன் மீது இயற்றிய உலா. இதில் அவ்வேந்தனுடைய முன்னோர்களின் வரலாறுகளையும் வீரச்செயல்களையும் காணலாம். இது 774 அடிகளை உடையது. இதன் இறுதியில் ஒரு வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் உள்ளன.