பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

219


பிற்காலத்தில், சில ஊர்களில், திருக்கோயிலின் பெயர் அதனைச் சூழ்ந்துள்ள ஊர்ப்பெயராக மாறி வழங்கப்பெற்று வருகின்றது. ஊரின் எஞ்சிய பகுதிமாத்திரம் பழைய பெயருடன் நின்று நிலவுவதாயிற்று. இதற்கு எடுத்துக் காட்டாகப் பழையாறை நகரை எடுத்துக் கொள்ளலாம்; பழைய காலத்தில், இது மிகப் பெரிய நகரமாயிருந்தது. பல்லவர், சோழர் முதலான அரசர் குடும்பத்தினர் இந்நகரில் வதிந்து வந்தனர் என்பது பல கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. பட்டீச்சுரம், திருச்சத்தி முற்றம், திருமேற்றளி, வடதளி, தென்றளி என்பன இந்நகரத்திலிருந்த திருக்கோயில்கள் ஆகும். இவற்றுள், பட்டீச்சுரம், திருச்சத்திமுற்றம் என்பவை தனித்தனி ஊர்களாக இந்நாளில் வழங்கப்பட்டு வருகின்றன. திருமேற்றளி என்ற திருக்கோயிலின் பெயர் 'திருமத்தடி' என்ற ஊர்ப் பெயராக மாறிப் போயிற்று. அன்றியும், இது இக்காலத்தில் தனி ஊராக உள்ளது. இவைகளுக்கு அணித்தாகப் பழையாறை நகர் இந்நாளில் ஒரு சிற்றூராக இருக்கின்றது. பழையாறை நகரிலிருந்து பட்டீச்சுரமும் திருச்சத்தி முற்றமும் திருமேற்றளியும் வேறு வேறு ஊர்களாயின்மை போல, சாத்தனூரிலிருந்த திருக்கோயிலாகிய திருவாவடுதுறை என்பதும் ஒரு தனி ஊராகப் பிற்காலத்தில் வழங்கிவருதல் அறியத்தக்கது. திருவாவடுதுறை என்னும் பெயரும் இத்திருக்கோயிலைச் சூழ்ந்துள்ள சாத்தனூரின் ஒரு பகுதிக்கு மாத்திரம் வழங்கப் பெற்றுள்ளமையின், எஞ்சிய பகுதி சாத்தனூர் என்னும் பழைய பெயருடன் இதற்கு அண்மையில் இன்றும் நிலை பெற்றிருத்தல் உணரற் பாலதாகும்.