பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220




38. புறநாட்டுப் பொருள்கள்

1. வெற்றிலை :- வெறு+இலை; சமைத்தற்குப் பயன்படாத இலை என்பது இதன் பொருள். தெலுங்கில் இதனை ‘ஆக்கு’ என்று வழங்குவர்; 'ஆக்கு' என்பது இலை என்று பொருள்படும். வடநாட்டு மொழிகளில் இதனைப் 'பான்' என்று கூறுகின்றனர்; இலை என்று பொருள்படும் 'பர்ணம்' என்ற ஆரிய மொழி 'பான்' என்றாயிற்றுப் போலும். தாம்பூலம், தம்பலம் என்பனவும் இலை என்ற பொருளையே உணர்த்தும். இது, மலேயாவிலிருந்து நம் நாட்டிற்குக் கொண்டு வரப்பெற்றதாகும்.

கோவலன், மதுரையிலுள்ள ஆயர்பாடியில் உண்டபிறகு அவனுக்கு கண்ணகி வெற்றிலைச்சுருள் அளித்தாள் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. இதனை ‘உண்டினி திருந்த உயர்பேராளற் கம்மென் றிரையலோ டடைக்கா யீந்த -’ என்னும் சிலப்பதிகார அடிகளால் உணர்க (XVI. 54-55) எனவே, இற்றைக்கு ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முன்னரே வெற்றிலை நம் தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது நன்கறியக் கிடக்கின்றது.

2. சர்க்கரை :- வடமொழியில் இச்சொல் மணல் என்று பொருள்படும். மணல் போன்றிருக்கும் காரணம் பற்றி இப்பெயர் எய்தியது போலும். இஃது இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் நம் நாட்டிற்குச் சீனாதேயத்தினின்று கொண்டுவரப்பட்டது என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

3. மிளகாய் :- இது நானூறு ஆண்டுகட்கு முன்னர்த் தென் அமெரிக்காவிலுள்ள சில்லி என்ற மாகாணத்திலிருந்து நம் தமிழ் நாட்டிற்குக் கொண்டுவரப் பெற்றதாகும். சுவையில் இது மிளகைப் போல் உரைப்பாயிருத்தலால் தமிழ்மக்கள் முதலில் இதனை மிளகுகாய் என்று வழங்கத் தொடங்கினர். பின்னர், இது 'மிளகாய்' என்று மருவி வழங்கலாயிற்று.