பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


பின்னர், ஆங்கிலே யரிடத்திலிருந்து இதனைப் பருகுவதற்குத் தமிழ்மக்கள் கற்றனர். எனவே நம் தமிழ்நாட்டில் தேயிலையும் காப்பியும் பருகும் வழக்கம் நன்கு நிலைபெறுவதாயிற்று. ஆனால் வடநாட்டினர் தேயிலை நீரை மாத்திரம் பருகுதலை ஆங்கிலேயரிடமிருந்து பழகியுள்ளார்.

7. உருளைக்கிழங்கு :- இஃது அமெரிக்காவில் முதலில் பயிரிடப் பட்டு வந்தது; 300 ஆண்டுகளுக்கு முன் இதனை ஐரோப்பாவிற்குக் கொண்டு வந்து பயிரிடத்தொடங்கினர்; நூறு ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவிலிருந்து நம் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது.

8. புகையிலை :- இது முதலில் அமெரிக்காவில் பயிரிடப் பெற்று வந்தது. பிறகு அமெரிக்காவிலுள்ள வர்ஜீனியா என்னும் நாட்டிலிருந்து எலிசபெத் அரசியின் காலத்தில் கி.பி. 1586 ஆம் ஆண்டில் சர் வால்டர் ராலி என்பவனால் இங்கிலாந்திற்குக் கொண்டுவரப் பட்டது; இதனையுட் கொண்டால் பசியின்மை, மந்தம் முதலியவற்றைப் போக்கும் என்று அந்நாளில் ஆங்கிலேயர் பெரிதும் நம்பினர். ஆனால் இதன் விலை மிகுதியாயிருந்தமையால் செல்வ மிக்கவர்களே இதனை வாங்கி உபயோகித்து வந்தனர். பிறகு அமெரிக்காவில் இது பயிரிடப் படும் நாட்டை ஆங்கிலேயர் பிடித்துக் கொண்டு இதை மிகுதியாகப் பயிரிட்டு இங்கிலாந்திற்கு அனுப்பி வந்தமையால் இதன் விலையும் குறைந்தது. ஆங்கிலேயர் எல்லோரும் இதனை எளிதில் வாங்கி உபயோகிக்கத் தொடங்கினர். முதலாம் ஜேம்ஸ் மன்னன் ஆட்சிக்காலத்தில் இதனை உபயோகிக்கும் தீயவழக்கம் இங்கிலாந்தில் எங்கும் பரவிற்று. அம்மன்னர் இதனைத்தடுக்கச் சட்டம் ஏற்படுத்தினன். ஆனால் இதனை உபயோகிக்கும் வழக்கம் ஒழியவில்லை. இதற்குக் காரணம் இது அந்நாட்டின் மக்களது மனத்தைப் பிணித்துத் தனக்கு அடிமையாக்கிக் கொண்டமையேயாம். உரோமாபுரியிலுள்ள போப் கோயில்களில் இதனை உபயோகிப்பவர்களைச் சாதியினின்று விலக்க வேண்டுமென்று ஒரு சட்டம் செய்தார். முதலாம் சார்லஸ் வேந்தன் காலத்தில் (1625 கி.பி. 1649 கி.பி.) உப்பு, கஞ்சா,