பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


சூத்திரத்தையும் இதன் உரையையும் எழுதியவர் ஆத்திரையர் பேராசிரியர் என்று இவை எழுதப்பெற்றுள்ள ஏடுகளில் வரையப்பட்டிருக்கிறது. பொதுப் பாயிரச் சூத்திரத்திற்குத் தாம் உரை வரைந்துள்ள செய்தியைத் தொல்காப்பியத்திற்கு உரை கண்ட பேராசிரியர், மரபியலுரையில் குறித்துள்ளனர். இவற்றால் தொல்காப்பியத்திற்கு உரைகண்ட பேராசிரியரும், ஆத்திரையர் பேராசிரியரும் இருவர் அல்லர் என்பது இனிது பெறப்படு கின்றது. ஆகவே, இவ்விருவரும் ஒருவரே யாவர் என்பது தேற்றம்.

இனித் தொல்காப்பியத்திற்கு உரைகண்ட பேராசிரியரே, ஆசிரியர் தொல்காப்பியனார் மரபியலில் நூலிலக்கணம் கூறியுள்ளமையால், அதனை யொழித்து அவர் கூறாது விடுத்துள்ள ஈவோன் தன்மை, ஈதல் இயற்கை, கொள்வோன் தன்மை, கோடன் மரபு எனும் நான்கின் இலக்கணங்களையும் அறிவுறுத்துவான். இப்பொதுப் பாயிரச் சூத்திரத்தை உரையுடன் இயற்றிவைத் துள்ளனர் எனக் கோடலே பொருத்த முடைத்து.

இனி, இவ்வுரையாசிரியர் எக்காலத்தே இத்தமிழகத்தில் வாழ்ந்தவர் என்பதை ஆராயலாம். ’தமிழ் நாவலர் சரிதையில் ’பேராசிரியர் நேமிநாதர் பட்டோலை பிடிக்க, ஒட்டக்கூத்தர் பாடியது’ என்ற தலைப்பின் கீழ் ஒரு பாடல் காணப்படுகிறது. இதனால் பேராசிரியரும் ஒட்டக்கூத்தரும் ஒரே காலத்தவர் என்பது பெறப்படுகின்றது. அன்றியும், பேராசிரியர் தொல்காப்பியச் செய்யுளியல் உரையில், மடலையும் உலாவையும் பற்றி வரைந்துள்ள குறிப்புக்கள், இவர், ஒட்டக் கூத்தர் காலத்தினராய் இருத்தல் வேண்டும் என்பதை விளக்குகின்றன.

கவிச் சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தர், விக்கிரம சோழன், அவனது மகனாகிய இரண்டாங் குலோத்துங்க சோழன், அவனது மகனாகிய இரண்டாம் இராஜராஜ சோழன் இவர்கள் காலத்து வாழ்ந்தவர் என்பது, இவர், அம்மூன்று சோழ மன்னர் மீதும் ’மூன்று உலாக்கள்’ பாடியுள்ளமையானே நன்கறியப்படுகின்றது. எனவே, இந்நல்லிசைப் புலவரது காலம், அம்மூவேந்தரது ஆட்சிக்காலமாகிய கி.பி. 1118க்கும் 1178க்கும் இடைப்பட்டதாதல் வேண்டும். இக்காலத்தேதான், தொல்-