பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

231


காப்பியத்திற்கு உரை கண்டவரும், இப்பொதுப் பாயிரத்தை உரையுடன் இயற்றியவரு மாகிய நமது பேராசிரியர் வாழ்ந்தவராவர். ஆகவே, இவ்வாசிரியரது காலம், கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும்.

இவ்வாசிரியாது இயற்பெயர், ஊர் முதலியவற்றை அறிவிக்கும் கருவிகள், இதுகாறுங் கிடைத்தில் வாதலின், அவற்றை அறிந்துகொள்ளக் கூடவில்லை!

இப்பொதுப் பாயிர உரைப்பிரதி யொன்று, திருவாரூர் அரசாங்க உயர்தரக் கலாசாலையின் தமிழாசிரியரும் எனது நண்பருமான மணக்கால் திருவாளர் செ.முத்துரத்ந முதலியார் அவர்களிடமிருந்து சில ஆண்டுகட்கு முன்னர்க் கிடைத்தது. இதனோடு ஒப்புநோக்குவதற்கு வேறு பிரதி பெறமுயன்றும் கிடைக்கவில்லை. வேறு பிரதிக்காகக் காலந் தாழ்த்துவதிற்பயனில்லையென்றுணர்ந்து, கிடைத்த பிரதியை, இறவாதுகாத்தல் வேண்டி, இதனை ஒருவாறு ஆராய்ந்து வெளியிடத்துணிந்தேன்.

இதன் பெருமையை யுணர்ந்துள்ள நல்லறிஞர், எனது அறியாமையினால் இப்பதிப்பிற் காணக் கிடக்கும் குற்றங்களை எனக்கு அறிவிப்பதோடு, இதனை ஆராய்ந்து வெளியிடத் துணிந்த எனது தறுகண்மையைப் பொறுத்தருளவும் வேண்டுகிறேன்.

இவ்வுரைப் பிரதியை எனக்கு அன்புடன் உதவிய நண்பர் திரு.செ.முத்துரத்ந முதலியார் அவர்களையும் இப்பதிப்பின் செலவை அன்புடன் ஏற்றுக்கொண்டு, விரைவில் இதனை அச்சியிற்றி வெளிப்படுத்தியவரும் என்பால் பேரன்புடையவருமாகிய திருப்புறம்பயம் திரு. சொ.சிவானந்தம் பிள்ளை அவர்களையும் என்றும் மறவேன்.

மக்களது நன்முயற்சிகட்குத் துணையாய் இருந்து அவற்றை இனிது முடிப்பித் தருளும் எல்லாம் வல்ல இறைவனது திருவடித்தாமரைகளை வாழ்த்தி வணங்குகின்றேன்.

-தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்