பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


யாவதுமஃகாவன்பு மென்பது, எவ்விடத்துஞ் சிறைப்படாத வன்பு மென்றவாறு. அஃதாவது எல்லார் மாட்டும் அழுக்காறின்றி நிகழுமுள்ள நிகழ்ச்சி.

வெஃகாவுள்ளமு மென்பது, அவாவின்மையு மென்றவாறு.

துலைநாவன்ன சமநிலையுளப்பட வென்பது துலாக் கோலது நாப்போல, நட்டார் மாட்டும் பகைவர் மாட்டும் ஒப்ப நிற்கு நடுவு நிலைமைப்பட வென்றவாறு.

எண்வகை யுறுப்பினராகி யென்பது, இச்சொல்லப்பட்ட வெண்வகை யுறுப்பு முடையராகி யென்றவாறு. மற்றும் நல்லாசிரியர் குணமின்னுங் கூறுவன வுளவன்றே. இவ்வெட்டினையுந் துணிந்த தென்னையெனின், இவற்றைப் புறத்திணையியலுள் அவைக்குரிய மாந்தர்க்குச் சிறப்புறுப்பாக வோதினாராசிரியர் தொல்காப்பியனார் (சூத்திரம் 75). அஃது நோக்கி இவற்றை வேறு துணிந்தார். இனிக் கற்பிக்குமாசிரியர்க் கின்றியமையாதன குணம் பிறவு முளவாகலி னவையும் வேறு கூறுகின்றாரென்பது.

வேளாண் வாழ்க்கையு மென்பது. விருந் தோம் பற்றொடக்கத்தில் வாழ்க்கையு மென்றவாறு, இது சொல்லிய காரண மாணாக்கற்கோ ரிடுக்கண் வந்தஞான்று மவனைப் பாதுகாப்பது மாசிரியர்க்குக் கடனென்றவாறு.

தாஅளாண்மையு மென்பது, மாணாக்கரை மிடியின்றிக் கற்பித்தலு மென்றவாறு.

உலகியலறிதலுமென்பது, சாதித் தருமமேயன்றி யுலகத் தருமமுமறிந்து உலகத்தோ டொட்ட வொழுகும் ஒழுக்கமு மென்றவாறு. அதனது பயன் மாணாக்கர்க்கு நூலுரைக்குங் காற் கோள்கணீங்கிய நிறைமதி யேய் பக்கத்து நாளுமோரையு நல்லன தெரிந்து துளங்கா வுள்ளமொடு கடவுள் வாழ்த்திக் கொள்வோனுணர் வகையறிந்து கொடுத்தற் றொடக்கத்தன வுடையனாதல் வேண்டு மென்றவாறு.

நிலைஇய தோற்றமுமென்பது, கடலுமலையும் போலப் பிறரால் அளத்தற் கரியனாகி எல்லாப் பொருளுந் தன்னகத் தடக்கி நிற்றலு மென்றவாறு.