ஆய்வுக் கட்டுரைகள்
15
நல்லிசைப் புலவருமாகிய பொய்கையாரையும் பிடித்துக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிட்டிருந்தான். பின்னர், ஆசிரியர் பொய்கையார் சோழன் செங்கணான் மீது'களவழிநாற்பது'[1] என்னும் ஒரு செந்தமிழ் நூல்பாடிச் சேரமானைச் சிறை மீட்டனர். இதனை,
“களவழிக்கவிதை பொய்கையுரை செய்யவுதியன் கால்வழித்தளையை வெட்டியரசிட்டவவனும்”
என்னும் கலிங்கத்துப்பரணிச் செய்யுளானு முணர்க (இராஜ பாரம்பரியம் -18).
இனித் ‘தென்னவனாயுலகாண்ட செங்கணான்' என்னும் திருநாவலூரர் திருவாக்கை நுணுகியாராயுமிடத்து, இவன் பாண்டி நாட்டையும் ஜெயித்துத் தன்னாட்சிக் குட்படுத்தியிருக்க வேண்டுமென்பது புலப்படுகின்றது. மேற்கூறியதையே “மின்னாடு வேலேந்து விளைந்தவேளை விண்ணேறத் தனிவேலுய்த் துலக மாண்ட தென்னாடன் குடகொங்கன் சோழன்“[2] என்னும் திருமங்கையாழ்வார் வாக்கும் பின்னும் வலியுடைத்தாமாறு செய்தலைக் காண்க. அன்றியும், இவனை, “தென்றமிழன் வடபுலக் கோன் சோழன்”[3] என்று திருமங்கைமன்னன் புகழ்ந்துரைத்தமையால் இவன் வடநாடுகளையும் ஜெயித்து ஆட்சிபுரிந்தவனென்பது நன்கு தெளியப்படும்.
இவ்வரசனைக் “கழன்மன்னர்மணிமுடி மேற்காகமேறத், தெய்வவாள் வலங்கொண்டசோழன்“[4] என்றும், “வெங்கண்மா களிறுந்தி விண்ணிலேற்ற விறன்மன்னர் திறலழிய வெம்மாவுய்த்த செங்கணான் கோச்சோழன்”[5] என்றும், “பாராளவரி வரென்றழுந்தை யேற்றப் படைமன்னருடல் துணியப் பரிமாவுய்த்த தேராளன் கோச்சோழன்“[6] என்றும் பன்முறை தம் பாசுரங்களில்
- ↑ இந்நூல் கடைச்சங்கமருவிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
- ↑ திருமங்கையாழ்வார் பெரியதிருமொழி ஆறாம் பத்து 6-ஆவ அம்பரம் 6-வது பாசுரம்.
- ↑ திருமங்கையாழ்வார் பெரியதிருமொழி ஆறாம் பத்து 6-வது அம்பரம் 5-வது பாசுரம்.
- ↑ திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி ஆறாம் பத்து 6-வது அம்பரம் 3-வது பாசுரம்.
- ↑ திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி ஆறாம் பத்து, ஆறாவது அம்பரம் 4-ஆவது பாசுரம்.
- ↑ திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி ஆறாம் பத்து, ஆறாவது அம்பரம், 9-ஆவது பாசுரம்.