பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

27


என்னுங் குறுந்தொகைப்பாடலால் அறியக்கிடக்கின்றது. இத்தகைய நாட்டிற்குத் தலைவனாக விளங்கிய நமது மழவர் பெருமானும் வருவாய்மிக்குடையவனாய் இரவலர்க்கு வரையாது கொடுக்கும் வண்மையனாய் இனிதுவாழ்ந்து வந்தனன்.

இவனது வள்ளன்மையை,

’மாரி வண்மகிழ் ஓரி’(நற்றிணை 265) எனவும்,

’மாவள்ளோரி
கைவள மியைவ தாயினு மைதே கம்ம’ (மேற்படி.52)

எனவும், அந்நாளில் விளங்கிய செந்தமிழ்ப் புலவர்களாகிய கபிலரும் பரணரும் புகழ்ந்து கூறியுள்ளனர். இவ்வள்ளல் தன்பால் எய்திய புலவர்கட்கும் இரவலர்கட்கும் யானையும் பொன்னும் மணியும் மிகுதியாக அளித்துவந்தனன். இதனை,

’தன்மலைப் பிறந்த தாவி னன்பொன்
பன்மணிக் குவையொடும் விரைஇக் கொண்மெனச் சுரத்திடை நல்கி யோனே விடர்ச்சிமை
யோங்கிருங் கொல்லிப் பொருந
னோம்பா வீகை விறல்பெய் யோனே’(புறம். 152)

’இழையணி யானை யிரப்போர்க்கீயும்
சுடர்விடு பசும்பூட் சூர்ப்பமை முன்கை
யடுபோ ரானா வாத னோரி’(புறம். 153)

என்னும் பாடல்களால் நன்குணரலாம். அன்றியும் ’தன் மலைப் பிறந்த தாவினன்பொன்’ என்பது அக்காலத்தே கொல்லி மலையி லிருந்து பொன் எடுக்கப்பெற்ற செய்தியை விளக்குதல் காண்க.

இவ்வள்ளல்பாற் சென்று ’நீரின்கண் பூவாதமணி மிடைந்த குவளைப்பூவை வெள்ளிநாராற் றொடுக்கப்பெற்ற பொன்னரி மாலையினையும் பிறவணிகலன்களையும் யானையணி களுடனே பெற்றுத் திரும்பினோர், பொருள்வருவாய்க் குரியவை யாய்த் தமக்கு இன்றியமையாதனவாயிருந்துள்ள தொழில் களையும் மறந்தொழிந்தனர்’ என்ற இவனது பெருங்கொடைத் திறத்தைப் பெரிதும் பாராட்டிக் கூறியுள்ளார் வன்பரணர் என்னும் புலவர் பெருந்தகையார்.