பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-8


இம்மழவர் கோமான், இங்ஙனம் பல்லாற்றானும் பெருமையுற்று வாழ்ந்துவரும் நாட்களில் கொல்லிக் கூற்றத்தின் பக்கத்திலுள்ள தகடூரில் வீற்றிருந்து அதனைச் சூழ்ந்துள்ள நாட்டை ஆட்சிபுரிந்துவந்த அதிகமான் நெடுமானஞ்சி என்பான் மலையமானாட்டின் மீது படையெடுத்துச்சென்று, அதனைக் கைப்பற்றிக் கொண்டு அந்நாட்டரசனாகிய மலையமான் திருமுடிக்காரியைத் திருக்கோவலூரினின்றும் துரத்தி விட்டனன், திருமுடிக்காரியோ மூவேந்தருக்கும் படைத் துணைமை பூண்டு உற்றுழியுதவி ஒரு காலத்தில் பெரும்புகழ் எய்தியவன். ஆதலால் மேற்கடற்கரையோரத்துள்ள தொண்டி என்னும் பட்டினத்தி லிருந்து அரசாண்டுவந்த ‘செல்வக் கடுங்கோ வாழியாத’னது புதல்வனாகிய பெருஞ்சேரலிரும் பொறையிடஞ்சென்று தனக்கு அதிகமானால் நேர்ந்த இன்னலை அறிவித்து அவற்றைப் போக்குமாறு வேண்டினன். அதனைக் கேட்ட சேரமன்னன் காரியின் நிலைமைக்குப் பெரிதும் இரக்கமுற்று அதிகமானைப் போரிற்புறங்கண்டு அவன் கவர்ந்துள்ள நாட்டைத் திரும்பப் கைப்பற்றி அதனைக் காரிக்கு அளிப்பதாக உறுதிகூறினன்; அன்றியும் அதிகமானோடு போர் தொடங்குமுன்னர் அவனது தாயத்தானாகிய ஓரியோடு பொருது அவனது கொல்லிக் கூற்றத்தைக் கைப்பற்றிக் கொள்வது இன்றியமையாததென்று அச்சேரமான் கருதினான். அதனை யறிந்த திருமுடிக்காரி சேரமானது படையுடன் வஞ்சி சூடி ஓரியினது கொல்லி மலைக்குச் சென்றனன். காரிக்கும் ஓரிக்கும் கொல்லிமலையின் பக்கலில் பெரும்போர் நடைபெற்றது. இரவலர்கட்கு இனியனாய் அன்னார் வேண்டிய வேண்டியாங்கு அளித்துவந்த பெருங் கொடைவள்ளலாகிய ஓரி, அப்போரில் இம்மண்ணுலகை நீத்து ஈவாருங் கொள்வாருமில்லாத வானுலகம் எய்தினான். இச்செய்தி,

‘குறும்பொறை நன்னாடு கோடியர்க் கீந்த
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த
ஓரிக் குதிரை யோரியும்’

என்ற சிறுபாணாற்றுப்படையடிகளானும்,