பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

29


’ஓரிக் கொன்ற வொருபெருந் தெருவிற்
காரி புக்க நேரார் புலம்போற்
கல்லென் றன்றா லூரே’

என்ற நற்றிணைப் பாடலானும்,

’முள்ளூர் மன்னன் கழறொடிக் காரி
செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
லோரிக் கொன்று சேரலற் கீத்த
செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி’

என்ற அகப்பாட்டானும் இனிது அறியப்படுகின்றது. போரில் வாகை மிலைந்த திருமுடிக்காரி மிக்க ஆரவாரத்தோடு ஓரியினது நகரத்துட் புகுந்து அதனையும் கொல்லிக் கூற்றத்தையும் கைப்பற்றிக் கொண்டான். பின்னர், அவன், அந்நாட்டைச் சேரமானுக்கு அளித்துவிட்டமையின், அது பெருஞ்சேரலிரும் பொறைக்கு உரியதாயிற்று. செந்தமிழ்ப் புலவர்களும் கொல்லி மலையைப் பொறையன் கொல்லியென்றே வழங்குவாராயினர், இதனை,

’இரவலர் மெலியா தேறும் பொறையன்
உரைசா லுயர்வரைக் கொல்லிக் குடவயின்’ (நற்றிணை185)

எனவும்,

‘துன்னருந் துப்பின் வென்வேல் வானவன்
இகலிருங் கானத்துக் கொல்லி போல’ (அகம். 338)

எனவும்,

’மறமிகு தானைப் பசும்பூட் பொறையன் கொல்லி’
                                (அகம். 303)

எனவும்,

’வெல்போர் வானவன் கொல்லிக் குடவரை’ (அகம்.213)

எனவும் போதரும் நல்லிசைப் புலவர்களது பாடல்களால் உணர்க. இரவலர்கட்கீந்து அதனால் இசைபட வாழ்ந்த நமது வள்ளலது பெருவாழ்வும் நல்லறிஞர் பலரும் இரங்கி வருந்துமாறு இங்ஙனம் முடிவெய்தியது. ஊழின் வலியை இந்நிலவுல கத்து யாவர்தாம் கடத்தல் கூடும்?