பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 8


இனி, இவனது கொல்லிமலையில் அமைக்கப்பெற்றிருந்த கொல்லிப் பாவையைப்பற்றிய செய்தியையும் ஈண்டுக் குறிப்பிடுதல் பொருத்தமுடையதேயாகும். செந்தமிழ்ப் புலவர்கள் அழகிற் சிறந்த பெண்டிர்களுக்கு இப்பாவையை உவமானமாகக் கொண்டு 'கொல்லியம்பாவையன்னாய்' என்று குறிப்பிடுதல் பெருவழக்கா வுள்ளமையின், இது பேரழகு வாய்ந்த தொரு பாவையாயிருத்தல் வேண்டும். இது கண்டார் உள்ளமும் விழியும் கவர்ந்து காமவேட்டை வருவித்து இறுதியிற் கொல்லத்தக்க தாகக் கடவுளாலேயே அமைக்கப் பெற்ற ஒரு மோகினிப்படிமம் என்று கூறுகின்றனர். இப்பாவை, கடவுளால் காக்கப்படுவ தென்பதும், காற்று, மழை, இடி முதலிய இடையூறுகளால் தன் உருக்கெடாமல் என்றும் தன் இயல்பு குன்றாதிருப்பது என்பதும்,

‘கொல்லித்
தெய்வங் காக்குந் தீதுதீர் நெடுங்கோட்
டவ்வெள் ளருவிக் குடவரை யகத்துக்
கால்பொரு திடிப்பினுங் கதழுறை கடுகினு முருமுடன் றெறியினு மூறுபல தோன்றினும் பெருநிலங் கிளரினுந் திருநல வுருவின்
மாயா வியற்கைப் பாவை’((நற்றிணை201)

என்ற பாடலால் நன்கு புலப்படுகின்றன. அன்றியும். ’கொல்லி நிலைபெறு கடவுளாக்கிய பலர்புகழ் பாவை’ என்னும் அகப்பாட்டா னும்(அகம்.209) ’பெரும்பூட் பொறையன் பேஎ முதிர் கொல்லிக் - கருங்கட் டெய்வங் குடவரை யெழுதிய - நல்லி யற்பாவை’ என்னும் குறுந்தொகைப்பாடலானும் (குறுந்.89) ’கொல்லிக் குடவரைப் - பூதம் புணர்ந்த புதிதியல் பாவை’ என்னும் நற்றிணைப் பாடலானும்(நற்.192) இப்பாவை கடவுளால் ஆக்கப்பட்டதென்பது தெளிவாம்.