பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

37


எழுதியிருப்பது தவறுடைத்தென்க. எனவே, முதற்கண்ட ராதித்தரே திருவிசைப்பாப் பாடியவரென்பது திண்ணம்.

இனி, கண்டராதித்தரது ஆட்சிக்காலம் மிகச்சுருங்கிய தொன்றேயாம். இவர், தம்கீழ்வாழுங்குடிகளிடத்தில் அன்பும் இரக்கமுமுடையவராய்ப் பல நற்கருமங்களைச் செய்துள்ளனர், இவர்காலத்திற் போர் முதலியன நிகழவில்லையாதலின், குடிகள் எல்லோரும் இன்புற்று வாழ்ந்துவந்தனர். ஆதலால், அன்னோர் தம் அரசர்பாற் பேரன்புடையராய், அவரைக் கடவுளின் அவதாரமென்றே கருதுவராயினர். இவருக்கு வீரநாரிணியார், செம்பியன்மாதேவியார் என்ற இருமனைவியர் இருந்துள்ளன ரென்று தெரிகிறது. அவ்விருவருள் முன்னவர் இவரது வாழ்க்கையில் முதற்பகுதியிலிருந்தவர். இவ்வரசியார் பலகோயில்கள் கட்டுவித்துப் புகழுற்றாரென்று கி.பி. 931ல் வெட்டப்பெற்ற முதற்பராந்தக சோழதேவரது கல்வெட்டுக் கூறுகின்றது. இவரது வாழ்க்கையிற் பிற்பகுதியிற், பட்டத்தரசியாக விளங்கியவர் செம்பியன்மா தேவியார் எனப்படுவர். அரசரது இரண்டாம் மனைவியாகிய அவ்வம்மையார் மழநாட்டரசரது புதல்வியென்று கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. நமது கண்டராதித்தருக்கும் செம்பியன்மாதேவியருக்கும் மதுராந்தகன் என்ற ஒரு புதல்வர் பிறந்தனர். அவரை உத்தமசோழரென்று அழைப்பது வழக்கம். புதல்வர் பிறந்தவுடன் அரசர் வானுலகஞ் சென்றாரென்று லேய்டன் செப்பேடுகள் கூறுகின்றமையின் இவர் செம்பியன்மா தேவியாருடன் நெடுங்காலம் வாழ்ந்திருக்க வில்லையென்று தெரிகிறது. ஆனால், அவ்வரசியார் மாத்திரம் தம்நாயகர் இறந்தபின்னர், நீண்டகாலம் உயிருடனிருந்துள்ளனர். முதல் இராஜராஜ சோழ தேவர் ஆட்சியின் 16- ஆம் ஆண்டாகிய கி.பி.1001 வரை அவர் இருந்தாரென்பது. கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. எனவே, தம் நாயகர் இறந்தபின்னர் சற்றேறக்குறைய நாற்பத்தைந்து வருடங்கள் அவர் உயிருடனிருந் திருக்கின்றனர். அவர், அரசரது முதன் மனைவியாரைப்போல் தாமும் பல கோயில்கள் எடுப்பித்து அவற்றிற்கு நிலங்கள் அளித்தனரென்று பலகல்வெட்டுக்கள் புகழ்ந்துரைக்கின்றன.