பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

47


புலப்படும். அன்றியும் இன்னோர் சிறந்த வில்லாளிகளாகவும் இருந்திருத்தல் வேண்டுமென்பது ‘ஒண்சிலை மழவர்’1 கல்லா மழவர் வில்லிடந்தழீஇ2 என்பவற்றால் அறியப்பெறும். இனி ”மழவர்முழவின் நோன்றலை கடுப்பப் பிடகைப்பெய்த கமழ் நறும்பூவிணர்”3 என்ற மதுரைக் காஞ்சியடிகள் இன்னோர் ஒருவகைப் போர்ப் பறை கொட்டிச் செல்லும் வழக்க முடையரென்பதைத் தெரிவிக் கின்றன. இவர்கள் பூந்தொடை விழவு4 மிகச் சிறப்புடைய தென்பது187- ஆம் அகப்பாட்டால் தெரிகின்றது. இனிப் ‘பூந்தலைமழவர்’5 என்னும் மதுரைக் காஞ்சியானும் “குறியற்கண்ணிமழவர்”6 என்னும் பதிற்றுப் பத்தானும் இவர்கள் தங்கட்கு அடையாளமாகப் போர்ப்பூவும், தார்ப்பூவும் சூடிக்கொள்ளுதல் பெறப்படுகின்றது “தகர்மருப் பேய்ப்பச் சுற்றுபுசுரிந்த சுவனமாய்ப் பித்தைச் செங்கண் மழவர்“7 என்று இன்னோரது தலைமயிர் சிறப்பிக்கப் பெற்றுள்ளது. உண்ணற் குரிய உணவுகளாக இவர்கள் கைக் கொண்டவை உருசியுள்ள தின்பண்டங்களும் வீரர்கட்குரிய வேறுவித உணவுமேயா மென்பது “தீம்புழல் வல்சிக் கழற்கான் மழவர்“8 “செவ் வூன்றோன்றா வெண்டுவை முதிரை வாலூண்வல் சிமழவர்“8 என்பவற்றால் நன்குணரப் படுகின்றது.

இங்ஙனம் போர்வீரத்திற்கும் படைவன்மைக்கும் பேர் பெற்றவர்களாக விளங்கிய மழவர் மிகச்சிறப்புற்று உயர்நிலையி லிருந்தது மதுரைமா நகரின்கண் கடைச்சங்கம்நின்று நிலவிய காலமேயாம். எனவே, இவர்கள் சிறந்து வாழ்ந்தமை இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரேயாமெனக் கொள்க.

கி.பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த பல்லவ வேந்தனும் முதல்மகேந்திரவர்மனது தந்தையுமாகிய சிம்ம விஷ்ணு வென்பான் தென்னாட்டின்மீது படையெடுத்துப் பாண்டியர், சோழர், கேரளர், மழவர் என்ற மன்னவர்களை வென்றானென்று காசாக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன“10. இதனால் கி.பி . ஆறாம் நூற்றாண்டிலும் மழவர் குடியினர் சேரபாண்டிய சோழரோடு ஒருங்குவைத் தெண்ணப்படும் பெருமையுடைய ராயிருந்தன ரென்பது தெளிவாகின்றது. கி.பி. எட்டாம் நூற்றாண்டினிடையில் பாண்டிநாட்டில் ஆட்சி