பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-8


தனியரசு புரிந்தவனாதல் வேண்டும் என்பது நன்கு புலப்படுதல் காண்க. இவன் கி.பி. 1338 வரை ஆட்சிபுரிந்தான். இவன் காலத்தில் படைவீட்டு ராஜ்யம் மகோன்னத நிலையி லிருந்து இவனுக்குப் பிறவேந்தரெல்லாம் அஞ்சுவராயினர். விஜயநகர வேந்தர்களும் தமக்குத் தெற்கிலுள்ள சம்புவராயர்களைக் கண்டு அஞ்சி அவர்களை எவ்வாறயினும் தம் சிற்றரசர்களாக்கித் திறைசெலுத்தச் செய்ய வேண்டுமென்று காலங்கருதிக் கொண்டிருந்தனர். இன்னோரது முயற்சி வென்றுமண்கொண்ட சம்புவராயன் என்பானது ஆட்சியுள்ள வரையில் பயன்பட வில்லை. கி.பி. 1338-ல் அவ்வேந்தன் விண்ணுல கெய்தவே அவனது புதல்வன் இராஜநாராயண சம்புவராயன் முடி சூட்டப்பட்டான். இவன் நாட்டாட்சியை எய்திய பின்னர்ச் சகலலோக சக்கிரவர்த்தி ராஜநாராயண சம்புவராயன் என்று அழைக்கப் பெற்றான். இவன் கி.பி, 1339 முதல் 1366வரை ஆட்சிபுரிந்தான். இவனது கல்வெட்டுக்கள் காஞ்சி, மாமல்லபுரம், படைவீடு, வேலூர், திருப்புக்கொளி, போளூர்த்திருமலை முதலான இடங்களில் காணப்படுகின்றன. இவனும் தனது முன்னோர்கள் போலவே பல கோயில்களுக்கு நிபந்தங்கள் விட்டிருக்கின்றான். இவனது ஆட்சிக் காலத்தில் தான் விஜயநகர வேந்தனா குமார கம்பண்ணன் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து வந்தனன். இது கி.பி.1365-க்கு முன்னர் நிகழ்ந்தது. பெரும் படையுடன் தென்னாடு போந்த விஜயநகர வேந்தன் முதலில் படைவீட்டிராஜ்ஜியம் எனப்படும் இராஜகம்பீர விராஜ்ஜியத்தைத் தாக்கினான். தாக்கவே இராஜ நாராயண சம்புவராயனும் தன் பகைவனை எதிர்த்துப் போர்புரிந்தான், இறுதியில் விஜயநகர வேந்தன் வெற்றியடைந்தமையின் சம்புவராயன் தன் நாட்டை இழந்தான். ஆயினும் குமார கம்பண்ணன் தான் கைப்பற்றிய நாட்டைத் திரும்ப அச்சம்புவராய மன்னனுக்கேயளித்து அவனைத் தனக்கு ஆண்டுதோறும் திறைசெலுத்தி வருமாறு கட்டளையிட்டு விட்டுப் பாண்டிநாடு நோக்கிச்சென்றான். பிறகு கி.பி.1366-ல் இராஜநாராயண சம்புவராயனும் இறந்தான். அவன் வழியில் தோன்றிய சம்புவராயர்களும் குறுநில மன்னராகி விஜயநகரத் தரசர்களுக்குக் கப்பஞ் செலுத்திவந்தனர். அன்னோர் பல ஆண்டுகள் அந்நிலையிலேயே இருந்துவந்தனர்.

னாகிய