பக்கம்:துங்கபத்திரை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

"இல்லை மன்னவரே! காவலன் மீது தவறில்லை; நான் தான் தூதுவனைப்போல் வேடமிட்டிருந்தேன். நான் அவ்வாறு கிளம்பாவிட்டால் மதுரையில் என்னுடைய எதிரிகள் என்னைத் தீர்த்திருப்பார்கள்." சந்திரசேகரபாண்டியன் சொன்னான்.

"மதுரையில் உமக்கு எதிரிகளா? ஏன் அவ்வளவு தூரத்திற்கு விட்டு வைத்தீர்? எதிரிகள் நாலாயிரம் என்றாலும் நான்கு பேரைத் தண்டித்தால் போதுமே! மற்றவர்களெல்லாம் கொற்றத்திற்கு அடிபணிந்து விடுவார்களே" என்றார் ராயர்.

"எதிரிகள் என்றாலும் உள்நாட்டு எதிரிகளல்ல மன்னவரே! திடீரென்று பாண்டியநாட்டின் மீது சோழர்கள் படையெடுத்துவிட்டார்கள், நான் எதிர் பார்க்கவே இல்லை!"

"என்ன! வீரசேகரரா இந்த அநீதியைப் புரிந்தார்! என்னால் நம்பமுடியவில்லையே! ஒரே நாட்டில் ஒரே மண்ணில் இவ்வாறு ஓராயிரம் பிணக்குக்கள் இருந்தால் அயலார் புகுந்து ஏன் நம்மை வெற்றிகொள்ள மாட்டார்கள்?" – ராயர் பெருமூச்சு விட்டுப் பேசிக்கொண்டிருக்கும் போது பண்டிதர் ராஜா அய்யர் அங்கே வந்தார்.

"ஜெய விஜயீபவ! சக்கரவர்த்தி பாண்டியருக்குக் கிரகம் சரியில்லை சோழனுக்கு இது நல்லநேரம். நேர பலனைப் பாராமல் நாம் இதில் தலையிடுவது உசிதமல்ல. பாண்டியன் தோற்றால் அந்த அவமானம் நம்மைத் தான் விரட்டிப் பிடிக்கும்!" என்று ஆரம்பித்தார் ராஜா அய்யர்.

"என்ன சொன்னீர்? நமது படை போனால் கூடவா பாண்டியர் தோற்றுவிடுவார்?" என்று உரக்கப் பேசினார் ராயர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/18&oldid=1507259" இலிருந்து மீள்விக்கப்பட்டது