பக்கம்:துங்கபத்திரை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

"உன் தந்தை இனி வெற்றிபெற வேண்டியது என்னடா இருக்கிறது? பெற வேண்டிய வெற்றிகளையெல்லாம் பெற்று விட்டார். மன்னர் அவருக்குச் சூட்ட வேண்டிய விருதுகளை யெல்லாம் சூட்டி விட்டார்; இனி நீதானடா கண்ணே உன் தந்தையின் பெயரைக் காப்பாற்ற வேண்டும்" என்று வாஞ்சையுடன் அடுக்கிக் கொண்டே போனாள் அந்தப் பெண்மணி.

"அம்மா, உனக்குச் செய்தி தெரியுமா? பண்டித மணி ராஜா அய்யர் ஒரு மகமதிய ஒற்றன். நமது மகிபரைக் கொல்லுவதற்கு இத்தனை நாள் அவன் மாறு வேடம் போட்டு உலவி இருக்கிறான். நேற்று இரவு நான்தான் அவனைப் பிடித்துக் கொடுத்தேன். அதற்காக இன்று, ராஜ சபையே என்னைப் புகழ்ந்தது. பெரும்புலவர் பெத்தன்னா எனக்குப் பரிசுகள் வழங்கி கௌரவிக்க வேண்டுமென்று பேசினார். அஷ்டகஜப் புலவர்கள் யாருமே இதை மறுக்கவில்லை. அப்பா இருந்து இதைப் பார்க்க முடியவில்லையே என்ற கவலைதானம்மா எனக்கு" என்றான் விசுவநாதன்.

"அப்பா இருந்திருந்தால் இதெல்லாம் ஒன்றுமே நடந்திருக்காது" என்றாள் அவன் தாய்.

"என்னம்மா, இப்படிச் சொல்லிவிட்டீர்கள்! அப்பா இருந்தால் பெத்தன்னா என்னைப் பாராட்டமாட்டாரா? பரிசு கிடைக்காதா?" ஆச்சரியத்துடன் கேட்டான் விசுவ நாதன்.

"நான் சொல்வது புரியவில்லை உனக்கு. அப்பா இருந்திருந்தால் ராஜா அய்யர் மன்னரைக் கொல்லவே எத்தனித்திருக்கமாட்டார். அவர் இல்லை என்று தெரிந்துதான் வந்த காரியத்தை முடிக்கப் பார்த்திருக்கிறான். அல்லது அந்த ராஜா அய்யர்தான் உன் தந்தையை மதுரைக்கு அனுப்பவே ஏற்பாடு செய்திருக்க வேண்டும்" என்று துல்லிதமாகக் கணக்கிட்டுச் சொன்னாள் அந்தப் பெண்மணி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/33&oldid=1507505" இலிருந்து மீள்விக்கப்பட்டது