பக்கம்:துங்கபத்திரை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

"அம்மா! எப்படித் தெரிந்தது உங்களுக்கு? சொல்லி விட்டீர்களே! அரண்மனையில்கூட இன்று அப்படித்தான் பேசிக்கொண்டார்கள்!" என்று பரபரப்புடன் கூறினான் விசுவநாதன்.

அப்போது வாசல் கதவை யாரோ தட்டினார்கள். குலமரபுப்படி விசுவநாதன் தாயார் மறைவிடத்திற்குப் போய் விட்டாள். விசுவநாதன் வாசல் கதவைத் திறந்தான். அவைப்புலவர் துர்ஜதி உள்ளே நுழைந்தார். எவரையும் தலைகுனியச் செய்யும் அவருடைய படர்ந்த நெற்றியும், ஆழ்ந்த எண்ணங்களை எதிரொலிக்கும் பார்வையும் விசுவநாதனையும் பக்தனாக்கி விட்டன. மிகுந்த மரியாதையுடன் புலவரை உள்ளே அழைத்துச் சென்று அமரவைத்து சுவை நீர் படைத்தான். துர்ஜதி இதற்கு முன் பலமுறை நாகமரைச் சந்தித்து ராஜகாரியங்களைப் பற்றிப் பேச அங்கு வந்திருக்கிறார். ஆனால் நாகமநாயக்கர் இல்லாதபோது வருவது இதுதான் முதல்முறை. விசுவநாதன் இதை உணர்ந்து கொண்டான் என்பதை அவனது வரவேற்பும், உபசரணையும் புலப்படுத்தின.

"விசுவநாதா, அரசருக்கு இன்று உன் மேல் அளவு கடந்த பிரியம். அகம் குளிர. முகமலர உன்னையே பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கும் பூரண திருப்தி" — துர்ஜதியார் நளினமாகப் பேசத் தொடங்கினார்.

பெரியவர்களின் அன்பிற்குத்தான் நான் தவம் கிடந்தேன் புலவர் பெருமானே! அதுவே எனக்குப் பெரும் பரிசு" விசுவநாதன் மிகுந்த அடக்கத்துடன் சொற்களை விழுங்கி விழுங்கி அவிழ்த்து விட்டான்.

"விசுவம், ஒன்றை மறந்து விடாதே! இனிமேல் தான் நீ எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசன் அன்பும் அரவத்தின் பாசமும் ஒரே தன்மை உடையது. அச்சம், அயர்வு அபிலாஷை எதுவும் இனிமேல் உன்னிடம் தலைக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/34&oldid=1507508" இலிருந்து மீள்விக்கப்பட்டது