பக்கம்:துங்கபத்திரை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

கங்கா சிரித்துக் குமுறி விட்டாள். காவிரிபோல் அவள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தது.

"கங்கா, ஆடாதே! உன் ஆட்டத்திற்கு இன்னும் அஸ்திரம் பலமாகவில்லை. அவனோ இப்போது அந்தப்புரத்து மோகன லாகிரியில் சொக்கிக் கிடக்கிறான். நீயோ தலைகால் தெரியாமல அபிநயம் பிடிக்கிறாய்."

"உங்கள் மகள் மனம் விட்டுக் கேட்கிறேன். அவர் கிடைக்கவில்லை என்றால், உங்களுக்குப் பின் எனக்கு வேறு துணை ஏது அப்பா?"– கங்கா கெஞ்சினாள்.

"அவன் மறுத்தால் என்ன செய்வது குழந்தாய்?"

"பெருங் கவிஞர் பெத்தன்னாவுக்கே அரும்பெரும் யோசனைகள் கூறும் தாங்களா அப்பா இப்படிப்பேசுவது? அஷ்ட கஜங்கள் மன்னரின் இஷ்டகஜமாக பீடுநடை போட்டு உலவும் தங்களுக்குத் தெரியாத வழியா எனக்குத் தெரியப் போகிறது?"– கங்கா பத்திரகாளி வேஷம் போட்டாள். "கங்கா உள்ளத்தைக் கிள்ளாதே" துர்ஜதி அழுத்தமாகக் கூறினார்.

"அப்பா!"

"கங்கா, உனக்குத்தான் சொல்லுகிறேன்."

"அப்பா, நீங்கள் கண்களை அகட்டிப் பார்த்தால் கனல் பொழிகிறது என்கிறார்கள்; குரலை உயர்த்திப் பேசினால் புலி சீறுகிறது என்கிறார்கள்; நெற்றியைச் சுளித்தால், புருவத்தை நெறித்தால் நேர் வைரிகள்கூட சரண் அடைந்துவிடுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். நிரபராதியைக் குற்றவாளியாக்கும் துணிச்சல், குற்றவாளியை விடுதலை செய்யும் ஆற்றல்– இவ்வளவு இருந்தும் உங்கள் மகளுக்கு ஏற்றவரை– அவள் விரும்புபவரை இணங்க வைக்க முடியாதா அப்பா உங்களால்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/41&oldid=1507876" இலிருந்து மீள்விக்கப்பட்டது