பக்கம்:துங்கபத்திரை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

உயர்ந்த நெஞ்சு நிமிர்ந்தது. விம்மிப் புடைத்தது. வீர சபதம் கூடப் புரிந்து விட்டார். மனிதனை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்தால், குணத்தில் நீங்கள் தங்கக் குன்று என்று வர்ணித்தால் அவன் தலை கவிழ்ந்து விடுகிறது. எதிரியையும் அவன் மன்னித்து விடுகிறான். கஞ்சனும் வள்ளலாக மாறிவிடுகிறான்.

பொழுது புலர்ந்தது. படுக்கையிலிருந்து கண் விழிக்கும்போது விசுவாமித்திரனைப்போல் வெடுவெடுவென்று பேசினார் துர்ஜதி.

"கங்கா, ருத்திர தாண்டவம் தொடங்கி விட்டது. இனி மித்திர பேதம் பார்ப்பது இழுக்கு. இப்பொழுதே போகிறேன். சிங்கராயனைப் பார்த்துச் செய்ய வேண்டியதைச் செய்கிறேன்" துர்ஜதி பூபாளம் பாடத் தொடங்கினார்.

"சிங்கராயருக்கும் விசுவநாதருக்கும் உறவு அதிகமப்பா. சிங்கராயர் சொன்னால் விசுவநாதர் கேட்பாராக்கும்......!" தாகத்தோடு பேசினாள், கங்கா.

"நன்றாகச் சொன்னாய். கீரியும் பாம்பும் கூடி விளையாடலாகுமா? பாலைக் குடிக்காதே என்று பூனையை கேட்டுக் கொள்வதற்கு வாலைச் சுற்றிவரும் நாயிடமா சிபாரிசுக்குப் போவார்கள். நம் எதிரிக்கு எதிரியை நாம் புகழ்ந்தால் நம் எதிரி இணங்குவான்; உள்ளம் கலகலத்துப் போகும். கங்கா–என் அருமை மகளே, உன் தந்தை என்ன செய்யப் போகிறான் என்பதைக் கவனி, படைக்குள் பிளவு, கட்சி– உட் கட்சிப் போராட்டம், அரண்மனைக்குள்ளேயே குழப்பமெல்லாம் நடக்கப் போகிறது. என்றைக்கு ஒரு வாலியப் பயல் என் சொல்லை மதிக்க வில்லையோ அவளை விட்டு வைப்பது தவறு! கங்கா கதவை மூடிக்கொள்! வேலை இல்லை யென்றால் மல்லிகை எடுத்து மாலை தொடுத்துக் கொண்டிரு நள்ளிரவானாலும் நான் போன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/43&oldid=1507879" இலிருந்து மீள்விக்கப்பட்டது