பக்கம்:துங்கபத்திரை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44


காரியத்தை சித்தி பெறாமல் திரும்பமாட்டேன். கங்கா! பதனம்" என்று கூறிவிட்டு, துர்ஜதி வெளிக்கிளம்பினார். அவருடைய பாதக் குறட்டின் ஓசை விசுவநாதனின் குதிரை நடைபோல் இருப்பதை எண்ணி கங்கா புளகாங்கிதம் அடைந்தாள்.

***

தளபதி சிங்கராயன் தர்பாருக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். பொன்மயமான முத்திரைகள் பதித்த நீலவர்ணப் பட்டாடைகள் தளபதியின் கம்பீரத்திற்கு சவால் விட்டன.

துர்ஜதியார் உள்ளே நுழைந்தார். "வாழ்க நின் புகழ்!" என்று இச்சகமாகப் பேசிக் கொண்டே புகுந்தார்.

"வருக இளம்பருதிக்கு முன்னே இன்று இலக்கியத்தைப் பார்க்கிறேன். புலவரே இன்று உமக்குப் பல்லக்கு வரவில்லையா?"– சிரித்துக் கொண்டே கேட்டான் சிங்கராயன்.

"ஏன் வராது? நான் வந்த வேலை பல்லக்கில் வர வேண்டிய வேலை அல்ல. அதனால்தான் என் பட்டுக் கொடையை மட்டும் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன்."

"சொந்த அலுவலோ?"

"சுயநலம் கலந்த பொதுநலத்திற்காக வந்திருக்கிறேன். தளபதியாரே, இதில் நான் வெற்றி பெற்றால் சாந்தி அடைவேன்: நீர் கீர்த்தி பெறுவீர்," என்று ஆரம்பத்திலேயே விசையைத் திருகினார் துர்ஜதி. சிங்கராயன் நிமிர்ந்து உட்கார்ந்தான்."விஜயநகரத்தின் துரோகம். இப்படி தலைவிரித்தாடும் என்று நாம் எதிர்பார்க்கவேயில்லை" என்று துர்ஜதி பேச ஆரம்பித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/44&oldid=1507880" இலிருந்து மீள்விக்கப்பட்டது