பக்கம்:துங்கபத்திரை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

இதைக் கேட்டதும் தளபதிக்கு நாடி தளர்ந்துவிட்டது.

"அவர்களுக்குள் காதல் இருக்கலாம். பணியாளர்கள் பார்த்திருக்கவும் கூடும். ஆனால், வேந்தர் இதை நம்புவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. துர்ஜதியாரே, கொற்றவன் உயிர்காத்த உத்தமன் என்று விஜயநகரம் அவனைப் புகழ்ந்து கொண்டிருக்கிறது; பரிசும் பட்டயமும் தர மன்னர் காத்துக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் விசுவநாதன் மீது எந்தக் குற்றத்தைச் சுமத்தினாலும் மன்னர் ஏற்றுக்கொள்ள மாட்டார். இளவரசி துங்கபத்திரைக்கும் விசுவநாதனுக்கும் கள்ளக்காதல் வளர்வது உண்மையாக இருந்தாலும், நாம் அதற்கு காலமறிந்து வினை மூட்ட வேண்டும். வெறும் வாயை மென்று கொண்டிருந்த நமக்கு இன்று அவல் கிடைத்திருக்கிறது. அவசரப்படாதீர்கள்" என்றான் சிங்கராயன்.

துர்ஜதியன் முகத்தில் கரிப்புகை படிந்தது. ஆனாலும் அவரது வேகம் தளர்ந்துவிடவில்லை. மனம் வெந்த புண்ணைப்போல் எரியத் தொடங்கியது. உலகில் பலரைக் கோழையாக்கும் தோல்வி, சிலரைப் புலியாக்கி பிராயச் சித்தம் தேடிக்கொள்கிறது. துர்ஜதி நிமிர்ந்து பார்த்தார். சுவரில் எதிரே புலி ஒன்று வாலை முறுக்கிக்கொண்டு நின்றது.

4

விசுவநாத நாயக்கனை வேதனை புரட்டிப் புரட்டி வேகவைத்தது. துங்கபத்திரையை மறக்க வேண்டும் இல்லாவிட்டால் தாய்த்திருநாட்டின் கொற்றவன் கூற்றுவன் ஆகிவிடுவான் என்று துர்ஐதி எச்சரிக்கை விடுத்துப் போனது அவனது உள்ளத்தைக் குடைந்துகொண்டே இருந்தது. இதற்கெல்லாம் மேலாக விசுவநாதனை இன்னொரு பயம் வேறு பிடித்து உலுக்கிக்கொண்டிருந்தது. தன்னுடைய காதல் ரகசியம், மதுரைக்குப் போயிருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/46&oldid=1507883" இலிருந்து மீள்விக்கப்பட்டது