பக்கம்:துங்கபத்திரை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

செய்தது. அணி மிகு பெரும் கோலம் பூண்டு அத்தாணி மண்டபத்திற்குப் போகும் அரசனைப்போல் காவலர் இழையும் கன்னி மாடம் செல்ல ஆயத்தமானார்.

அமைதியான இரவு நேரம்- குளிர்ந்த நிலவு. அல்லி ராஜ்யம் நடத்தும் இரவு நேரம். நந்தவனத்து கன்னிப் பூக்களின் நறுமணம் வாடைக் காற்றையும் அமிழ்த்திவிட்டு சபதம் கூறி வந்தது. கவிகள் கண்டால் எளிதில் விட்டுவிட மாட்டார்கள். அழகு பெண்களிடம் இல்லை. அமைதியில் தான் இருக்கிறது என்று பாடத் தொடங்கி விடுவார்கள். தனது ஐராவதம் தேவேந்திரன் தேவமாதர்களுடன் விளையாடப் போனது இது போன்ற இரா காலத்தில்தான் என்று வர்ணிக்கவும் தலைப்பட்டு விடுவார்கள். முதுமைக்குச் சபலத்தையும், வாலிபத்திற்கு வெறியையும் திணிக்கும் சுவையான பொழுதில் விசுவநாத நாயக்கன் அந்தப்புரத்திற்குப் போனான். விஜய நகரத்திலுள்ள ஒவ்வொரு மரத்திற்கும், மதிலுக்கும் கண்கள் இருப்பதாகவே அவனுக்குப்பட்டது. கிளிகள் சிறகடித்தது காவலர்களின் பேச்சுக் குரலாக உறுத்தியது. நடுங்கிப் போனான். மனந்தான் ஈகையைப் பிறப்பிக்கிறது; அன்பை வளர்க்கிறது. அதைப் போல் வீரத்தைச் சுரப்பதும் மனம்தான். மனம் பீதி கண்டிருக்கும் போது பரந்த மார்பும் புஜபலமும் பயன்படுவதில்லை. அழுகித் தொங்கும் வெள்ளரிப் பழத்தைப் போல் உடம்பு கலகலத்துப் போகிறது.

விசுவநாதன் அந்தப்புரத்துக் கோட்டைச் சுவரை நெருங்கும்போது, மயக்கம் கண்டவனைப்போல் நடந்தான். சொந்தமில்லாத சொத்தைத் திருடப்போகும் கொள்ளைக் காரனாகத்தான் அவன் நினைத்துக்கொண்டான். அவன் அந்தப்புரத்திற்குள் நுழைந்து நிலாமுற்றத்தை அடையும்போது இளவரசி குறிப்பிட்ட நேரம் வந்துவிட்டது. வாடிக்கையாக அவள் வரும் ரகசியப் பாதைப் பக்கமாக விசுவநாதன் உட்கார்ந்து இருந்தான். அவள் வருவதாக இருந்தால் மாடத்தில் விளக்கு எரியும்; மல்லிகை தன்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/48&oldid=1507885" இலிருந்து மீள்விக்கப்பட்டது