பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


8

அருணோதயம் உண்டாவதற்கு முன்பே, உறக்கத்தை விட்டு எழுந்து விட்டனர் அவ்வூர் மக்கள், கிராமவாசிகனாதலால், அந்த அதிகாலையிலேயே சுறுசுறுப்பாகக் காரியங்களைச் செய்யலாயினர். மங்கையர் வீதிகளில் சாணந் தெளித்துப் பெருக்கிச் சுத்தஞ் செய்தனர். ஆடவர் வயல் நோக்கிச் சென்றனர்.

மயிலாடுதுறை நீர்வளமும், நிலவளமும் உடைய ஊராதலால் எங்கு பார்த்தாலும் செழுமையாகக் காணப்பட்டது. கர்ப் பெயருக் கேற்ப, கோல மயில்கள் ஒயிலாகத் தோகை விரித்து ஆடாவிட்டாலும், வயல் வெளிகளில் நஞ்சைப் பயிர்களும், புஞ்சைப் பயிர்களும், கதிர் பிடித்துக் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன. பச்சைப்பசேல் என்ற இப் பசுமைக் காட்சி காலை சூரியோதயத்தில் பார்ப்பதற்கு ரம்மியமாயிருந்தது. வேளாள வீதியில் ஒட்டு வில்லை வீடு ஒன்றின் வாசலில் கோலம் போட்டுவிட்டு நிமிர்ந்த வயோதிக மாது ஒருத்தி வண்டிச் சப்தங் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். உடனே முதுமையால் ஒளியிழந்திருந்த அவள் கண்கள் ஆச்சரியத்தால் அகல விரிந்தன.

"மங்கை! என்ன செய்யறே, உள்ளே! ஓடிவா பட்டணத்திலே இருந்து......" என்று அக்கிழவி வீட்டின் உட்புறத்தை நோக்கிக் கூறினாள்.

"பட்டணத்திலே இருந்து" என்றதும் அவள் சொல்லி முடிக்கும் முன்பே மங்கையர்க்கரசி செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டுப் - பதறி யோடி வந்தாள்.

"பட்டணத்திலே இருந்தா? யாரு அம்மா?"

"சிவாவோ, விசுவமோ? சரியா தெரியவில்லை. அக்கா வீட்டிலே இருந்து தான்......"