பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தும்பைப் பூ

11

தது. குதிரைகூட மற்ற ஜட்கா வண்டிக் குதிரைகளைப் போல வற்றி வாடியில்லாமல் கொழுகொழுவென இருந்தது. அதன் கருமேனியிலும், பிடரி மயிரிலும் சூரிய ஒளிபட்டுப் பார்ப்பதற்கு ஒருவிதக் கவர்ச்சியைத் தந்தது.

இந்த ஜட்கா வண்டியில் அமர்ந்து போய்க்கொண்டிருந்த மங்கையர்க்கரசிக்குக் கடற்கரைக் காட்சிகளெல்லாம் விந்தையாக இருந்தன. அவளுடைய கயற்கண்கள் வியப்பினால் விரிந்து காணப்பட்டன. அவள் கண்முன் காணப்படும் ஒவ்வொரு காட்சியையும் கட்டிடத்தையும், பொருளையும் ஆவலாகவும் அதிசயந்தோன்றவும் பார்த்துச் செல்வதிலிருந்து அவள் இப்போதுதான் முதன் முறையாகச் சென்னை நகரத்திற்கு வருகிறாள் என்று தெரிந்தது.

‘மாலையில்தான், கடற்கரையில் மக்கள் திரள் திரளாகக் கூடி இருப்பார்கள்; உல்லாசமாகப் பொழுதுபோக்குவார்கள்’ என்று அவள் தன் ஊரில் கேள்விப்பட்டிருக்கிறாள். ஆனால் இப்போது இவ்வளவு அதிகாலையில் சென்னைக் கடற்கரை மேற் குறித்தவாறு கலகலப்பாக இருந்தது, அவளுக்கு அதிசயத்தையும் களிப்பையும் ஒருங்கே ஏற்படுத்தியது. மக்கள் நீராடுவதாலும் துணி துவைப்பதாலும் நித்திய கடன்களைச் செய்வதாலும் காவிரியாறு காலையில் கலகலப்பாக இருக்கும் காட்சி அச்சமயம் அவள் மனக் கண் முன் வந்தது. அவள் அடிக்கடி தன்னுடன் வரும் தாய் பக்கம் திரும்பி ஏதேதோ கேட்டுக்கொண்டே சென்றாள். சென்னைக்குப் பல முறை வந்து பழகியவளும், உலகானுபவம் நிறைந்தவளுமான சிவகாமி அம்மாள் சமயோசிதமாக அவளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். தானாகவும் மகளுக்குத் தெரிவிக்க வேண்டுமெனக் கருதியவற்றைக் கூறிக்கொண்டே போனாள்.

தான் பிறந்ததிலிருந்து இதுவரை பிரிந்தறியாத சொந்த ஊரையும் சுற்றத்தாரையும் விட்டு வரும் அவல நிலையை