பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

129


அவர்கள் கரத்தில் அதிகாரம் அகப்பட்டு விழிக்கிறதே, அண்ணா! அவர்கள் என்ன செய்தால் யார் கேட்க முடியும்? தலைமை அரசாங்கத்துக்கு இங்குள்ள நிலைமை தெரிவதில்லை. தெரிந்தாலும், 'ஆளைப் பார், முகத்தைப் பார்' என்று தாட்சணியம் பார்க்கிறார்கள். நீங்களோ சட்ட சபையில் வகித்து வந்த அங்கத்தினர்பதவியையும் மற்றப் பதவிகளையும் உதறித் தள்ளிவிட்டீர்கள். உங்களுக்கு உத்தியோக தோரணையில் செல்வாக்கோ, அதிகாரமோஎதுவுமில்லை, இந்நிலையில்......"

"ஏன் தயங்குகிறீர்கள்? தாராளமாகச் சொல்லுங்கள், முதலியார்வாள்! என்னை அவர்கள் அப்படியே விழுங்கி விடுவார்கள் என்கிறீர்களா? பயந்து நான் மூர்ச்சை போட்டு விட மாட்டேன். வெளிப்படையாகச் சொல்லுங்கள்... "

மாசிலாமணி, கொஞ்ச காலத்துக்கு நீங்களும் உங்களுடைய அபிப்பிராயங்களை வெளிபடையாகச் சொல்லாமலிருங்களேன். நமது சிவன், விசுவம் ஆசியவர்களையும் எதிலும் கலந்து கொள்ளாமல் இருக்கச் சொல்வது நல்லது. கருணை சிறிதுமில்லாத கொடியவர்களின் ஆட்சி குமைகிற காலம் மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது, அண்ணா ! அது வரை..."

சதானந்தம், "நீங்கள் இப்படிச் சொல்வதன் நோக்கம் என்ன? முதலியார்வாள்! நீங்கள் எதையோ மனதில் வைத்துக் கொண்டுதான் இவ்விதம் பேசுகிறீர்கள். இதன் பொருள்......."

"அயோக்கியர்களின் பொல்லாப்பு நமக்கு எதற்கு அண்ணா? உள்ளத்தை உள்ளபடி சொல்லும் இயற்கையுள்ள நீங்கள், ஊழலைக் காணச் சகியாது. களைந்தெறிய முயலும் நீங்கள், வெளியில் சுதந்திரமாக உலவி வரும்வரை தங்களுடைய , சுய நலக் காரியங்களை தாராளமாகச் சாதித்துக் கொள்ள முடியாதென்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அதனால்..."