பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

145

ஊடுருவி நோக்கின. அவருடைய கண்களில் கருமணிகளில் அவள் தன் கணவனுடன் கருத்தொருமித்து நடத்தி வந்த இருபத்தைந்து வருடத்திய இல்வாழ்க்கையைப் பார்க்கலானாள். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இளம் பெண்ணாக அவர் கையைப் பற்றியது, பிறந்தகத்திலிருந்து புக்ககம் வந்ததும் மாமியார், நாத்திமார் உட்பட அனைவரும் அன்புடன் வரவேற்றது, கணவனுடன் தனிக்குடித்தனம் நடத்தத் தொடங்கியது, கணவனின் காதலன்பிலே தவழ்ந்து புத்திரச் செல்வங்களைப் பெற்று, எல்லாரிடமும் இங்கிதமாய் நடந்து நற்பெயர் வாங்கியது, இவ்விதம் ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவளுடைய நினைவுச் சுருளில் வந்து கணவனின் கருமனிகளில் பிரதிபலித்தது. தான் அறியாமையால் பல பிழைகள் புரிந்த காலத்தும் கோபிக்காமல் அன்பாகக் கடிந்துகொண்டு திருத்திகொள்ள அவகாசங் கொடுத்து ஆதரவு காட்டிய கணவனின் பேரன்பையும் பெருந்தன்மையையும் நினைந்து அவள் இச்சமயம் விம்மிதமுற்றாள். இருபத்தைந்து வருட வாழ்வில் அவர்களிடையே நிகழ்ந்த கோபதாபங்கள் நீரில் கிழித்த கோடு போலக் கணத்தில் தோன்றிக் கணத்தில் மறைந்தவைதாம் அதிகம். அவர்களுக்கிடையில் ஏற்படும் சிறு பிணக்கம் அடுத்த கணம் மிக நெருக்கத்தைத்தான் உண்டு பண்ணும். புலவி கலவிக்குத் தான் அடிகோலும். ஊடலோ மகிழ்ச்சியாகக் கூடலைத் தான் கூட்டுவிக்கும். மற்றபடி மன மாற்சரியங்களோ பூசல்களோ மருந்துக்குக் கூட அவர்களிடையே ஏற்பட்டதில்லை. மங்கலமான மனை மாட்சிக்கு நன்கலமாக அவள் பிள்ளைகளைப் பெற்ற காலத்தில் எல்லாம் மறவாமல் தக்க பரிசுகள் பட்டாடைகளாகவும், பொன்மணி அணிகளாகவும் பிள்ளையவர்கள் வழங்கத் தவறியதில்லை. முதல் பிரசவமாகச் சிவகுமாரனப் பெற்ற காலத்தில் பிள்ளையவர்கள் பூரித்த பூரிப்பு, அவளைப் போற்றிய போற்றல், அணிமணி வழங்கி அளவளாவிய அகமகிழ்வு இவைகளை இப்போது நினைத்த போதும் அவள் இதயத்தில் இன்பந்தான் பெருக்கெடுத்து ஓடியது. இவ்வளவு அருமையான கணவரைத் தன் வாழ்க்கைத் துணைவராகப்