பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

147

விட” எனத் தொடங்கியவுடனே மீண்டும் அவள் அதரத்தை மூடினார்.

“நீ இப்படி யெல்லாம் பேசக்கூடாது. எனக்குக் கோபம் வரும்” என்று பிள்ளையவர்கள் கடிந்து கொண்டார்.

திலகவதி, “என்மீது கோபித்துக் கொள்ள உங்களுக்கு உரிமையுண்டு. தாராளமாகக் கோபித்துக் கொள் ளுங்கள்...”.’’ என்று வெளுத்த உதடுகள் மலரச் சொன்னாள். உடனே ஏதோ நினைத்துக் கொண்டு, “ஆனால், நாதா, ஒரு வரம். என் கண்மணிகளை மட்டும் கோபித்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் தாயற்ற குழந்தைகள். உங்களைத் தவிர, திக்கு யாருமில்லை. அதிலும் சிவனை நீங்கள் மன்னிக்க வேண்டும். அவன் சிறு பிள்ளைத்தனமாய் ஏதாயினும் பிழை செய்வான்.”

“விணாக மனதை அலட்டிக் கொள்ளாதே! திலகம்!” என்று அவளை மேலே பேசவெட்டாமல் தடுத்துவிட்டார் பிள்ளையவர்கள்.

இச்சமயம் கோகிலாவும் கணேசனும் முன்னே வர மங்கை அங்கு வரலானாள். இது கண்டு திலகவதி கணவன் மடி மீதிருந்த தன் தலையை எடுத்துக் கொள்ள முயன்றாள்.

உடனே மங்கை, “அக்கா. அப்படியே படுத்திருங்கள். நான் அப்புறம் வருகிறேன்” என்று கூறியவாறே அவ்விடத்தை விட்டுப் போக முயன்றாள்.

திலகவதி கை காட்டி, “போகாதே! மங்கை இரு. உன் வருகையைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் நான். நினைவு இழப்பதற்குள் உன்னிடம் சில விஷயங்கள் சொல்ல வேண்டும்” என்று படபடப்போடு கூறினாள்.

மங்கை வருத்தத்தோடு தயங்கி நின்றாள்.

திலகவதி தன் பிள்ளைகளைச் சில விநாடிகள் பார்த்துப் பின், “கோகிலா, தம்பியை அழைத்துப்போய்த் தூங்க வை.