பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப்பூ

149


என்பது உனக்குத் தெரியும், நான் உன்னைத்தான் பூரணமாக நம்பியிருக்கிறேன். உன்னை என் உயிலும் மேலாக மதித்துத் தான் இவர்களை உன்னிடம் அடைக்கலமாக விட்டுச் செல்கிறேன். நான் கேட்டுக் கொண்டபடி காப்பாற்றுவாயா? மங்கை! என் கையில் அடித்துச் சத்தியம் செய்து கொடு" என்று கேட்டாள்.

மங்கை கோவெனக் கதறி விட்டாள். பிள்ளையவர்களின் சுண்களிலும் தாரை தாரையாக நீர் பெருகி ஓடியது. பின் திலகவதி, தன் கணவனின் கரங்களை எடுத்து மங்கையின் கைகளில் சேர்த்து வைத்தாள். மங்கை ஏதோ பதில் சொல்ல முயன்றாள். ஆனால், அவள் நாவிலிருந்து வார்த்தை எதுவும் வெளிவரவில்லை. அதரம் மட்டும் தான் துடிதுடித்தது.

இச்சமயத்தில் கோகிலா, "இதோ அம்மா, பெரியண்ணா!" எனக் கூறியவாறு கணேசனை இருப்பில் தூக்கி வைத்துக் கொண்டு வந்தாள். சிவகுமாரன் என்னவோ ஏதேர் எனப் பதறியோடி வந்தான். சொல்லி வைத்தாற் போல் அண்ணன் பின்னோடேயே விசுவ நாதனும் வந்தான்.

திலகவதி ஜாடை காட்டி எல்லோரையும் நெருங்கி வருமாறு செய்து, அவர்களுடைய கரங்களையும் மங்கையின் கரங்களில் ஒப்படைத்தாள். தாயினுடைய அப்போதைய நிலை சிவன், விசுவம் ஆகியவர்களின் கண்களிலும் நீரை வரவழைத்தது.

இருந்தாற் போலிருந்து கலகலவென ஒசை கேட்டது. திலகவதியின் தொண்டையில் மீண்டும் சளியும் கோழையும் ஏற்பட்டு அவளை, மூச்சுத் திணற வைத்தது. கண்கள் மலர மலர விழித்தார். அடுத்த கணம் திலகவதியின் தலை சாய்ந்து விட்டது. மனைவியின் உயிர் பிரிந்து விட்டது என்று பிள்ளையவர்கள் அறிந்து ஓ'வெனக் கூவினார். மங்கையும் உண்மை புரிந்து கொண்டு “அக்கா' என்று கதறியவாறு பிரேதத்தின் மீது விழுந்து விட்டாள். பிள்ளைகளனைவரும் தேம்பித் தேம்பி அழலாயினர்.