பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

தும்பைப் பூ


கூடியவைகளையெல்லாம் சுருட்டிக்கொண்டு போய்விட வேண்டும் என்றல்லவா சாகஸங்கள் எல்லாம் செய்தார்கள்? தங்கள் சகோதரிக்கு இவ்வளவு பிள்ளைகள் இருக்கின்றனவே! அவர்கள் முன்னேற வேண்டாமா? அனுபவிக்கவேண்டாமா? என்ற எண்ணமே கிஞ்சித்தும் இருந்ததாகத் தெரியவில்லையே! இது தான் சமயமென்று அவர்கள் அத்தானைப் பிய்த்துப் பிடுங்கியதைப் பார்த்தபோது தானே, உயிர் பிரியும் சமயத்தில் உடன் பிறந்தாரைப்பற்றி நீ வெளியிட்ட அபிப்பிராயம் எவ்வளவு உண்மையானதென்று தெரிந்தது? அவர்களுடைய பேச்சையும் செயலையும் கவனித்த பிறகுதான் என் மீது எவ்வளவு பெரிய பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது? நீ கட்டளையிட்டுச் சென்றவாறு, என் கடமையை எவ்வளவு கண்ணுங் கருத்துமாகச் செய்யவேண்டும்? என்பதை என்னால் உணர்ந்து கொள்ளமுடிந்தது.

அக்கா! நீ என்னிடம் வைத்துள்ள முழு நம்பிக்கையை நான் ஒரு சிறிதும் பொய்யாக்க மாட்டேன், நீ எனக்கு விதித்துச் சென்ற கடமையை நிறைவேற்றும் விஷயத்தில் கடுகளவும் பிசகமாட்டேன். ஆனால், நீ எனக்கு அதற்குரிய வலிமையைத் தந்து கொண்டிருக்கவேண்டும். எனக்குத் தோன்றாத் துணையாயிருந்து எல்லா விஷயங்களிலும் வழி காட்டி யுதவவேண்டும் அத்துடன் சுற்றத்தாரும் அக்கம் பக்கத்தில் சூழ்ந்திருப்பவர்களும் பொறுமை, பொச்சரிப்பு காரணமாகப் பேசும் பழிப்புப் பேச்சுகளையும், சுமத்தும் வீண் பழிகளையும், அபவாதங்களையும் தாங்கிக்கொள்ளும் சக்தியை எனக்கு அளிக்கவேண்டும்.

இழவுக்கு வந்தவர்கள் பலர் அதிலும் உன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்-முக்கியமாக உன் சகோதரிகள் என்னைப் பற்றி மறைவிலும் நேரிலும் எவ்வளவு கேவலமாகப் பேசினார்கள் என்பது உனக்குத் தெரியும். நீ எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டுதானே இருந்தாய்? அப்பப்பா! அதை நினைத்தாலே உடம்பு கிடுகிடுக்கிறது; நெஞ்சு நடுக்கங் கொள்கிறது இந்த இழிமொழிகளைக் கேட்கச் சகிக்காமல், நான்