பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தும்பைப் பூ

19


மங்கையர்க்கரசி மேலே ஒன்றும் பேசாமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள், தலை குனிந்து யோசனையில் இருக்கும் மகளின் முகத்தையே சிறிது நேரம் கவனித்துக் கொண்டிருந்த சிவகாமியம்மாள், "வீணாக ஏதேதோ எண்ணி மனதை அலட்டிக் கொள்ளாதே. மங்கை! உனக்கு ஒரு குறைவும் வராது. நல்ல குணம் வாய்ந்த உனக்குக் கடவுள் துணையிருப்பார்..." என்று தேறுதல் சொன்னாள்.

மங்கையர்க்கரசி நிமிர்ந்து அன்னையை நோக்கினாள். அவள் கண்களில் நீர் ததும்பியது.

"கண் கலங்காதே, கண்ணு! உன் அண்ணன் சரியாயிருந்தால் நீ இப்படி அவதிப்பட வேண்டியிராது... நீ இங்கு கொஞ்ச நாள் இரு. உனக்குப் பிடிக்காவிட்டால் எனக்குத் தெரிவி, உடனே நான் வந்து உன்னை அழைத்துப் போகிறேன்" என்று சமாதானஞ் சொன்ன சிவகாமியம்மாள், "உன் அண்ணனிடம் நீ மன வருத்தம் கொண்டிருப்பதால், கொஞ்ச நாள் தூர இருந்தால் நல்லதென்று நினைத்துத்தான், திலகவதி கடிதமெழுதியதுமே, உன்னைக் கொண்டு வந்துவிட ஒத்துக்கொண்டேன். இல்லையானால்..." என்று வார்த்தையை முடிக்காமல் நிறுத்தினாள். பிறகு அவள் ஏதோ நினைத்துக் கொண்டு, "இன்னொன்று சொல்கின்றேன். எனக்கென்னமோ நீ உள்ளூரிலே தனிக் குடித்தனம் நடத்த முற்படுவதில் கொஞ்சமும் இஷ்டமில்லை, அண்ணனுக்கு வீம்பாக இருக்க வேண்டுமென்று நீ எண்ணுகிறாய். ஆனால், அதனால் நம் குடும்பத்துக்கு எவ்வளவு கௌரவக் குறைவு என்று சிறுசாகிய உனக்குத் தெரியவில்லை. இதைவிட கண் மறைவாக இன்னொருவர் வீட்டில் நீ இருந்து காலந்தள்ளுவது நல்லது என்று எனக்குத் தோன்றியது. ஆனால் திலகவதி வீடு அன்னியர் வீடல்லவே! என் சொந்த அக்கா மகள் வீட்டில் நீ இருப்பதில் யாதொரு சௌகரியக் குறைவும் உனக்கு இருக்காது. அத்துடன் அக்கா வீட்டில் இருப்பது பற்றி யாரும் ஒரு குறையும் சொல்ல முடியாது..." என்று கூறினாள்.