பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

தும்பைப் பூ

இதையெல்லாம் கவனியாத திலகவதி கணவனை வியப்பாக நோக்கி, “சித்தியைக் கூடவா தெரியல்லை உங்களுக்கு? வயதாக ஆக, மறதி அதிகமாய் விட்டதே!” என்றாள்.


“யாரு, சின்ன அத்தையா இது? அடையாளந் தெரிய வில்லையே! முன்னைவிட...” என்று பேச்சை மழுப்பி நினைவில்லாமையை மறக்க முயன்றார்.


“நான் எப்பவும் இருக்கிற மாதிரிதான் இருக்கிறேன், மாப்பிள்ளை! நீங்கதான் மிகவும் தளர்ந்துபோய் இருக்கிறீர்கள். தலையிலே நரைகூடத் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறதே!...”


“தாத்தாவாய் விட்டார் என்கிறீர்களா? சித்தி! கோகிலாவுக்கு இன்னும் இரண்டொரு வருஷத்திலே கல்யாணமாகி அவள் வயிற்றிலே பிள்ளை பிறந்தால், இவர் தாத்தா தானே!...”


மங்கையர்க்கரசி தவிர மற்றவர்களனைவரும், இவளுடைய நகைச் சுவையில் ஈடுபட்டனர். அவள் மட்டும் இதழ்களில் மலர்ந்த புன்னகையை உதட்டினால் மறைத்துக் கொண்டாள்.


“பார்த்து நெடுநாளாச்சு இல்லையா? அதனால்தான் திடீரென இனம் தெரியவில்லை, அத்தை!...” என்று சதானந்தம் பிள்ளை சமாதானம் சொல்ல முயன்றவாறு, “ஊரிலே எல்லோரும் செளக்கியந்தானே! மைத்துனப் பிள்ளை எப்படியிருக்கிறார்?...” என்று குடும்ப நலம் விசாரித்தார்.


“எல்லோரும் செளக்கியந்தான்” என்று சிவகாமியம்மாள், ஒரே வார்த்தையில் சுருக்கமாகப் பதிலளித்தாள்.


திலகவதி மங்கையர்க்கரசியின் அருகு போய் நின்று, “இவள் நம்ம சித்தி பெண்ணு. அஞ்சு வருஷத்துக்கு முன்னே மாயவரத்திலே ஒரு கலியாணத்துக்குப் போனோமே! ஞாபகமிருக்கா? மங்கையின் கலியானத்துக்குத்தான்” என்றாள்.