பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


3

செந்தோம் மாதா கோவில்மணி நான்கடித்தது. அப்போதும் வெய்யிலின் கொடுமை கணியவில்லை. செந்தோம் ஹைரோட் பாரிசத்தில் வசிப்பவர்களுக்கு மட்டும் கடற்காற்று வரப்பிரசாதம் போல் வீசிக் கொண்டிருந்தது. ஜன நெருக்கம் அதிகமில்லாத அந்தப் பகுதியில் அந்நேரத்தில் நிலவிய அமைதி மனதுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியதாயிருந்தது. மஞ்சள் வெய்யில் பட்டுப் பளபளத்துக் கொண்டிருந்த நீலக்கடலின் அழகில் திளைக்கவோ அல்லது அக்கடல் நீரில் வெள்ளித் துண்டங்கள் போல மின்னித் துள்ளிக் குதிக்கும் மீன்களைக் கொத்தித் தின்னவோ அப்பிரதேசத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த கடற்பறவைகள் இசைத்த இசைகான அமுதமாயிருந்தது.

உடம்பு அசதி காரணமாக உறங்கிக் கொண்டிருந்த திலகவதியை மாதா கோவில் மணி அடித்த ஒசை தட்டி எழுப்பிவிட்டது. கட்டிலைவிட்டு இறங்கியவள், “மங்கை, மங்கை” எனக் கூப்பிட்டுக் கொண்டே எழுந்து வரலானாள். ஆனால், அவளுக்குப் பதில் கிடைக்கவில்லை.

“மங்கை எங்கே போனாள்? ஒரு வேளை உறங்குகிறாளா?” என்று தனக்குள் கேட்டுக் கொண்டே நடந்தாள்.

குழாயடியில் பற்றுச் சாமான்களைத் துலக்கிக் கொண்டிருந்த பணிப்பெண் எசமானி தானாகப் பேசிக் கொண்டு வருவதைக் கேட்டு, “அவங்க சமையக் கட்டில் இருக்காங்க, அம்மா” என்று கூறினாள்.

“ஓ! அப்படியா? காபி போடுகிறாய் போலிருக்கு” என்று மெல்லச் சொல்லிய திலகவதி குழாயண்டைபோய் முகத்தைக் கழுவிக்கொண்டு சமையலறைக்குப் போனாள்.

மங்கையர்க்கரசி அடுப்புக்கு முன் பிரமை பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள். திலகவதி வருவதை அவள்