பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

34

மங்கையர்க்கரசி தலை குனிந்துகொண்டாள்.

“மங்கை, உண்மையைச் சொல். உனக்கு இங்கு குறை ஏதேனும் இருக்கிறதா? அல்லது இங்கே இருக்க உனக்குப் பிடிக்கவில்லையா? அப்படி ஏதேனும் இருந்தால் நீ தாராளமாக என்னிடம் சொல்லலாம். நான் வித்தியாசமாக எண்ணிக் கொள்வேனோ? கோபித்துக் கொள்வேனோ? என்று பயப்படவேண்டியதில்லை...”

“என்ன அக்கா, ஏதேதோ சொல்கிறீர்களே?...”

“பின் என்ன? நீ எதுவும் சொல்லாமல் இருந்தால் நான் வேறு எப்படி எண்ணிக் கொள்வது?......”

“இங்கு எனக்கு ஒரு குறையும் இல்லை, அக்கா! அப்படி எனக்கு இங்கே இருக்கப் பிடித்தமில்லாமலிருந்தால் அம்மா ஊருக்குப் போனபோதே நானும்கூடப் போயிருப்பேனே!...”

“அதுதானே நானும் கேட்கிறேன்...இப்பச் சொல்லு மங்கை உன் துயரத்துக்குக் காரணமென்ன, சொல்லு; என்னால் அதைப் போக்க முடியுமா என்று பார்க்கிறேன். நான் உன் சகோதரியல்லவா? என்னிடம் எதுவும் சொல்லலாம். சங்கோஜப்படுவதற்கே நியாயமில்லை...”

“என் பேச்சை நம்புங்கள், அக்கா! இருந்தாற்போலிருந்து கண் கலங்கியது. காரணம் ஒன்றுமேயில்லை...”

மங்கையர்க்கரசி இவ்வளவு தூரம் சொல்லிய பிறகு மேலும் வற்புறுத்திக் கேட்க, திலகவதி விரும்பவில்லை. ஆகவே, “ஒரு வேளை ஊர் நினைவு வந்து வருந்தினயோ என்று கருதினேன்...” என்று கூறிப் பேச்சை முடிக்க முயன்றாள்.

“ஊரில் யார் இருக்கிறார்கள், அம்மாவைத் தவிர? அம்மா இப்பத்தானே போனர்கள்? இதற்குள் அவர்களை நினைப்பதற்கு என்ன..??”