பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

இச் சிந்தனையின் முதிர்ச்சி நாளாவட்டத்தில் என் உள்ளத்தில் ஒரு சிறந்த நாவலாக என்னை யறியாமலே உருவாகிக் கொண்டிருந்தது. என் மதிப்புக்குரிய விருதுநகர் நண்பர் உயர்திரு வி. வி. இராமசாமி அவர்கள் தாம் தொடங்கி நடத்திக் கொண்டிருந்த தமிழ்த் தென்றல் மாத இதழுக்குத் தொடர் கதையாக வெளியிட ஒரு நாவல் எழுதித் தர வேண்டுமென்று 1952-ஆம் ஆண்டில் கேட்டார். அவர் வேண்டுகோளுக்கிணங்க நாவலொன்று எழுத முயற்சி எடுத்துக்கொண்ட போதுதான் இப்படி ஒரு கதை என் உள்ளத்தில் உருவாயிருப்பது தெரிந்தது. இந்நாவலுக்குச் சகோதர எழுத்தாளர்களிடையிலும் வாசகர்களிடையிலும் நல்ல வரவேற்பு இருந்தது. ஒரு பிரபல எழுத்தாளர். நான் இந்நாவலுக்குக் கொடுத்திருந்த பெயரையும், கதைப் போக்கிலுள்ள சில அம்சங்களையும் தமதாக்கிக் கொண்டதிலிருந்தே தொடர்ந்து படித்து வந்தவர்களின் உள்ளங்களை இது எவ்வளவு கவர்ந்திருக்கிறது என்று தெரிந்தது.

நம் தேசத்துக்கு ஆட்சி சுதந்திரங் கிடைத்த பின்னர் நிலவி வந்த அரசியல் நிலையையும் சமுதாய நிலையையும் அடிப்படையாக வைத்தே நான் இந்நாவலைப் புனைந்திருக்கிறேன். கதையின் கருப் பொருளும் அமைப்பும் அதில் நிலவும் சமுதாயச் சூழ்நிலையும், கதா பாத்திரங்கள் வெளியிடும் அபிப்பிராயங்களும் சுயராஜ்யங் கிடைத்த ஆண்டுக்கும், முதல் பொதுத் தேர்தல் நடந்து முடிந்த மூன்று நான்கு ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலத்தின் பிரதிபலிப்பு என்று கொள்ள வேண்டும். ஆனால், இது சுயாட்சிக்குப் பின் ஆளுங்கட்சியில் இருந்தவர்களில் ஒரு சிலரிடம் காணப்பட்ட மாறுதலையும் அதன் எதிரொலியாக எழுந்த விளைவுகளையும் ஏகதேசமாகப் படம் பிடித்துக், கற்பனையில் காட்டுவதே தவிர, இதில் வரும் ஒரு சில சம்பவங்களையும் நபர்களையும் நிசமென்று அப்படியே யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்நாவலில் வரும் சம்பவங்களும் பாத்திரங்களும் முழுக்க முழுக்க என் கற்பனையில் உதயமானவைகளே. கதையைச் சுவையாகக் கொண்டு செல்-