பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

தும்பைப்பூ

படுவது போதாதென்று, பிள்ளையும் பொது சேவை செய்யப் பிஞ்சிலேயே புறப்பட்டு விட்டது.....” என்று சொன்னாள்.


இதே சமயத்தில், வெளி வராந்தாவில் மாசிலாமணி முதலியார், “இது,நிசந்தானா அண்ணா! நம்ம சிவகுமாரன், சோஷலிஸ்டு கட்சி, கம்யூனிஸ்டு கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ளுகிறான்; திராவிடக்கழகத்தில் சேர்ந்து காங்கிரஸைத் தாக்கிப் பேசுகிறான் என்றெல்லாம் கூடச் சொல்கிறார்களே! நீங்கள் காங்கிரஸ்காரராயிருந்து- அதுவும்; நீண்ட காலக் காங்கிரஸ்காரராயிருந்து உங்கள் பிள்ளை எதிர்க்கட்சிகளில் சேர்ந்திருந்தால்......” என்று சொல்லுவது திலகவதி காதில் விழுந்தது. மங்கையும் சிவகுமாரன் பெயர் அடிபடவே, திலகவதியுடன் சேர்ந்து ஒற்றுக் கேட்கலானாள்.


சதானந்தம் பிள்ளை “சேர்ந்திருந்தால் என்ன? அப்பன் முட்டாள்தனம் பண்ணினால் மகனும் முட்டாள் போக்கிலேயே போக வேண்டுமென்று எங்கே சொல்லியிருக்கிறது? நான் காங்கிரஸ்காரன் என்று பெயர் வைத்துக் கொண்டு வாங்குகிற கெட்ட பெயர் போதாதோ!... நகரசபைத் தேர்தல் முடிவைக் கேட்ட பிறகு இனியும் காங்கிரஸ்காரனாயிருப்பதா என்றே என்னைக் கேட்டுக் கொள்ள வேண்டியவனாகிறேன். நாளை கோனார் பண்ணும் கூத்தினால் மந்திரி சபையின் வண்டவாளம் சந்தி சிரிக்கும்போது, காங்கிரஸ்காரர்களாயிருப்பவர்கள் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாக வேண்டியதைத் தவிர, வேறு வழியில்லே. எந்த மூஞ்சை வைத்துக் கொண்டு பொதுமக்கள் முகங்களில் விழிப்பது......? காங்கிரசுக்கு ஒரு முழுக்கு போட்டுவிடுவது என்றே......”


“அப்படியெல்லாம் அவசரப்பட்டு ஒன்றும் செய்து விடாதீர்கள், அண்ணா!” என்று அவருடைய ஆத்திர உணர்ச்சிக்கு அணை போட்டார் மாசிலாமணி முதலியார். “யாரோ சில அயோக்கியர்கள் தவறு பண்ணுகிறார்கள் என்பதற்காக நல்லவர்களாகிய உங்களைப் போன்றோர் வெளியேறி விடுவதென்றால் அப்புறம் என்ன இருக்கிறது? பொறுத்து