பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

61

மங்கை சாப்பாட்டு மேஜைமீது இலையைப் போட்டுவிட்டுப் பலகாரத் தட்டுகளை வைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.


அத்தான் வந்து அமர்ந்ததும் மங்கை நாணிக்கோணியவாறு நடந்து வந்து பலகாரங்களை இலையில் பரிமாறலானாள். அவள் உடம்பு இன்னதென்று விவரிக்க முடியாத அச்சத்தால் காற்றில் அசையும் மாந்தளிர் போல் நடுங்கியது. தனியாயிருந்து அத்தானுக்குப் பணிவிடை செய்வது அவளுக்கு என்னவோ போலிருந்தது.


“கோகிலாவாவது, கணேசனாவது பள்ளிக்கூடத்திலிருந்து வரக்கூடாது? சோதனை போல வேலைக்காரி கூட அல்லவா இன்று வரவில்லை?” என்று அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள். கூட யாராயினும் இருந்தால் கூச்சமோ அச்சமோ இல்லாமல் அவருக்கு வேலை செய்யலாமே என்று அவள் அங்கலாய்த்தாள்.


மங்கையின் நிலையை, சதானந்தம் பிள்ளை சடுதியில் புரிந்து கொண்டார். ஆகவே, அவர் அவளுக்குத் தைரியம் உண்டாக்கும் நோக்கத்தோடு,“ மங்கை, இதென்ன கோதுமை அல்வாவா? கேசரியா?...” என்று கேட்டுக் கொண்டே ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டார்.


“உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? பார்த்தால் கோதுமை அல்வா கேசரி போலவா தென்படுகிறது? அக்கா செய்தால் எப்படி இருந்தாலும் நன்றாயிருக்கும்” என்று அவள் கேலியாகச் சொல்ல நினைத்தாள்; ஆனாலும் நாணங் காரணமாக, “கோதுமை அல்வாதான், அத்தான், ஏன் நன்றாயில்லையா?” என்று மெல்லக் கேட்டாள்.


“சே! நன்றாயில்லையா? ரொம்ப நன்றாயிருக்கிறதே! நீ செய்வதற்குக் கேட்க வேண்டுமா?” என்று அவளை உற்சாகப் படுத்தும் எண்ணத்துடன் அவர் சொன்னார்.


அவ்வார்த்தைகள் கூட மங்கைக்குப் பரிகாசமாகத்தான் பட்டது. ‘பெண்டாட்டி செய்ததென்றால் அவருக்கு