பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

மங்கையர்க்கரசியா? திலகவதியா? எனச் சிலர் உள்ளத்தில் வினா எழும்பும். இதுபற்றி ஒரு முடிவுக்கு வர இயலாமலும் போகலாம். ஏனெனில் இவ்விரு பெண்களுமே இந்நாவலில் முக்கியமான பாத்திரங்களாவர். ஆயினும் இக் கதையைப் படித்து, சிறிது ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கு மங்கையர்க்கரசி தான் இந் நாவலுக்கே உயிராக இருப்பவள்; தொடக்சுத்திலிருந்து இறுதிவரை நடத்திச் செல்பவள் இவள் தான் என்பதை நன்கு அறிவர். நம் நினைவை விட்டு நீங்கமுடியாத ஜீவ சித்திரம் மங்கை ஒருத்திதான். இவள் போன்ற சிறந்த நற்குணவதியை நம் சமுதாயத்தில் அபூர்வமாகத்தான் பார்க்க முடியும்.

மங்கையர்க்கரசி இன்னமும் நம் கிராமப் புறங்களில் மத்தியதரக் குடும்பங்களில் பழைய காலப் போக்கில் வாழ்ந்து வரும் பெண்களின் பிரதிநிதியாக இருப்பவள். இவளைப் போன்ற இளம் மகளிரைத் தென் கோடிப் பகுதிக் கிராமங்களில் இப்போதுகூடப் பார்க்கலாம். தொடக்கத்தில் ஒரு சில நிமிடங்களில் வந்து மறைந்து போகும் அவள் அன்னையும் அப்படித்தான்.

சதானந்தம் பிள்ளை போன்ற கதாபாத்திரம் பார்க்கச் சாதாரணமாகத்தான் தோன்றும். ஆனால் சூழ்நிலைக்கும் சந்தர்ப்ப உணர்ச்சிக்கும் ஆளாகிவிடக் கூடிய சோதனை மிக்க நிலையிலும் தடுமாற்றத்துக்கு முழுதும் இரையாகாமல் சமாளித்து நின்று தன் தகுதியையும் ஒழுக்கத்தையும் தற்காத்துக் கொள்ளும் அவருடைய தனித் தன்மையை எல்லோரிடமும் காண முடியாது. லட்சோப லட்சம் மக்களில் ஒருவர் இருவர்பால் மட்டுமே காண முடியும்.

திலகவதி போன்ற மங்கையைப் பெரும்பாலும் எல்லா நல்ல குடும்பங்களிலுமே காண முடியும். நற்குடியில் பிறந்த இவ்வொரு பெண்ணும் திலகவதியைப் போல் கைப்பிடித்த கணவன்பால் மாறா அன்பும் நம்பிக்கையும்தான் கொண்டிருப்பாள். நோய்வாய்ப் பட்டு இறக்கும் நிலையிலும் அகமுடையானைப் பிரிந்துபோக, திலகவதியைப் போலவே