பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

77

கணேசனைக் குளிப்பாட்டி, கிராப் சீவி, சட்டை முதலியவைகளைப் போட்டுக் கொண்டிருந்தாள்.

புத்தகக் கட்டைக் கையில் எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் போகத் தயாரான விசுவநாதன் ஏதோ நினைத்துக் கொண்டு, “சித்தி, குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா” என்று கேட்டான். அதே சமயத்தில் சிவகுமாரனும், “நேற்றுக் கழற்றி மாட்டிய கோட்டு எங்கே காணோம், சித்தி?......” என்று வினவினான்.

ஏதோ கவனமாய், கணேசனுக்குச் சராய் போட்டுக் கொண்டிருந்த மங்கையின் செவிகளில் இவர்கள் சொன்னது விழவில்லை.

“சித்தி, நான் கேட்டது காதில் விழவில்லை.....?” என்று கத்தினான் விசுவம்.

சிவகுமாரனும், “மணியாய் விட்டதே! வேறே கோட்டாயினும் கொண்டு வாயேன், சித்தி!” என்று படபடத்தான்.

சிறிது தூரத்திலிருந்து மங்கையை உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்த திலகவதி, ம“ங்கை, எங்கே கவனமாயிருக்கே? பசங்க மணியாய் விட்டதென்று அடிச்சுக் கொள்கிறார்கள், நீ பாட்டுக்கு என்னமோ மகத்தாயாட்டம் ..... ” என்று கூவினாள். ஆத்திரம் மேலே பேசவொட்டாது அவள் தொண்டையை அடைத்துக் கொண்டது.

இப்போதுதான் சூழ்நிலையை யுணர்ந்து திடுக்கிட்டு எழுந்த மங்கை, “என்ன அக்கா? என்னையா கூப்பிட்டீங்க......?” என்று கேட்டாள். அவள் கைகள் பரபரப்பாக, கணேசனின் சட்டையில் பொத்தானைப் போட்டன.

அவளை விழுங்கி விடுவதுபோல் பார்த்துக் கொண்டே திலகவதி “வரவர மாமி கழுதை போலானாள் என்ற கதையாயிருக்கிறது உன் சங்கதி. வீட்டு வேலை மேல் கவனமில்லாமல் ஏதோ கோட்டையைப் பிடிக்கிறதுபோல் ஆகாசத்தை