பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

தும்பைப் பூ

போதும் அவள் மங்கையிடம் முகங்கொடுத்துப் பேசவில்லை. “எனக்குப் பசிக்கவில்லை, அப்புறம் சாப்பிடுகிறேன்; நீ போய்ச் சாப்பிடு” என்று வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டே சொன்னாள். அவள் இருக்கும் நிலையைக் கண்டு மங்கை மறுபேச்சுப் பேசாமல் போய்விட்டாள். அவளும் சாப்பிடவில்லை. பின் கட்டில் போய் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு தன் அவல நிலையை நினைத்து அவள் குமுறிக் குமுறியழலானாள்.

இவ்வி நிலையினால் பகல் முழுவதும் அவ்வீட்டில் அமைதி நிலவியது. பிற்பகலில் வேலைக்காரி வந்த பற்றுச் சாமான்களைத் துலக்கி வீடு வாசலைச் சுத்தஞ் செய்கையில் தான் திலகவதியின் குரல் கேட்டது

“சின்னம்மா எங்கே? எல்லாம் போட்டது போட்ட வாக்கில் இருக்கிறதே!”

வேலைக்காரி கேட்ட கேள்வியை முன் பக்கத்தில் இருந்து கேட்டுக் கொண்டு வந்த திலகவதி, “அவள்தான் கவர்னரம் மாவாய் விட்டாளே! இதையெல்லாம் எங்கே கவனிக்கப் போகிறாள்?” என்று சொன்னாள்.

இச்சொல்லின் கடுமை மங்கையைத் துடித்துப் பதைத்து எழுந்திருக்கச் செய்துவிட்டது. முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு, “சாமான்களை எடுத்துக்கொண்டாயா, முத்தம்மா” என்று கேட்டுக் கொண்டே வந்தாள் அவள்.

“சோறு கறியெல்லாம் அப்படியே.....” என்று ஏதோ பதில் சொல்லி வந்த வேலைக்காரி மங்கையைப் பார்த்ததும், “என்னம்மா, மூஞ்செல்லாம் அழுதழுது வீங்கியிருக்கிறாப் போலிருக்கே?” என்று திகைப்புடன் கேட்டாள்.

“ஒன்றுமில்லையே!” என்று முகத்தைப் பரபரப்பாகத் துடைத்துக் கொண்டே மங்கை. சாமான்களை ஒழித்துப் போட உள்ளே போனாள்.