பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

87


திலகவதியின் கடுகடுப்பான பேச்சையும், மங்கையின் அழுகை முகத்கையும் ஒப்பிட்டுப் பார்த்ததும் ஏதோ நிகழ்ந்திருக்கிறது என்று வேலைக்காரி ஊகித்துக் கொண்டாள். அதற்கு மேல் அவள் ஒன்றுங் கேட்காமல் தன் வேலைகளைக் கவனிக்கலானாள். ஆனால், அவள் மனம் மங்கையின் பரிதாப நிலைக்காகப் பச்சாதாபப் படலாயிற்று. பெரியம்மாளை விட சின்னம்மாளான இவள் எதையும் தனக்குத் தாராளமாய்க் கொடுக்கிறாள், எவ்விஷயத்திலும் சலுகை காட்டுகிறாள் என்பது மட்டுமல்ல: தன்னைப் போலவே இவளும் கைம் பெண்ணாக இருக்கிறாளே என்ற இரக்க எண்ணத்தால்தான் அவள் மங்கைமீது அநுதாபங் காட்டலானாள்.

அடுக்களையில் மங்கை சோற்றுப் பானையில் வெந்நீரை விட்டுக் கொண்டிருந்தாள். அச்சமயம் உள்ளே வந்த திலகவதி, “ஆமாம் சாதம் ஏன் அவ்வளவு மீந்து போச்சு? ஏன்? நீ சாப்பிடவில்லையா?......” என்று கேட்டாள்.

மங்கை ஒன்றும் பதில் சொல்லவில்லை.

“நான் கேட்கிறேன்; பேசாமல் இருக்கிறாயே?...”

அதற்கு மேலும் மெளனமாயிருக்கத் துணியாமல், ‘அப்படியே தூங்கிப் போய்விட்டேன், அக்கா!’ என மெல்லக் கூறினாள்.

திலகவதி தலையை அசைத்தவாறு, “தூங்கிவிட்டாயா? என்னண்டையா மறைக்கிறாய்? நீ என்ன செய்து கொண்டிருந்தாய் என்று எனக்குத் தெரியாதென்றா நினைக்கிறாய்?...” என்றாள்.

மங்கை தலையைக் குனிந்துகொண்டே, ஒழித்த சாமான்களை எடுத்துக் கொண்டு வேலைக்காரியிடம் கொடுக்க வெளியே போனாள்.

“உண்மையில் உறங்கி விட்டவளாயிருந்தால், எழுந்ததும் வந்து சாப்பிட்டிருக்கமாட்டாய்?...உம்; நீ செய்கிற அட