பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

தும்பைப் பூ


6-45 மணிக்கு வக்கீல் குமாஸ்தா வந்தார். அவரைப் பார்த்துவிட்டு, “எங்கே ஐயாவைக்காணோம், நாயுடு? என்று கேட்டுக்கொண்டே எழுந்தாள் திலகவதி. அப்போ திருந்த மன நிலையில், குறித்த காலத்தில் கணவன் வராததற்கு அவள் மிக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாள். அவர் இருந்தால் உரிமையோடு சண்டை போட்டிருக்கலாமே?” என்று நலிந்து போயிருந்த அவள் மனம் நினைத்தது. ஆகவே தான் வக்கீல் குமாஸ்தாவைக் கண்டதும், அவர் வராதது குறித்து ஆவலோடு விசாரிக்க எழுந்தாள்.

வக்கீல் குமாஸ்தா, வீட்டு எசமானியைக் கவனிக்கவில்லை. அப்போதுதான் உள்ளேயிருந்து வந்து கொண்டிருந்த மங்கையர்க்கரசியைப் பார்த்த அவர், ‘சின்னம்மா, ஐயா வர இன்னக்கு நேரமாகும். சாப்பாட்டுக்குத்தான் வருவாராம், காபி பலகாரம் எடுத்து வைத்துக்கொண்டு காத்திருக்க வேண்டாம் என்று சொல்லச் சொன்னார், கோனார் ஐயா கோர்ட்டண்டையே வந்து அழைச்சிக் கொண்டு போயிட்டார் நம்ம ஐயாவை’ என்று சொன்னர். “பொழுதோடவே வந்திருப்பேன், அம்மா! பஸ் கிடைக்க வில்லை. காத்துக் காத்துக் கால்கூடக் கடுத்தும் போச்சு.”

திலகவதி அப்படியே திகைத்து நின்றுவிட்டாள். ‘நான் கேட்டதைக்கூடக் காதில் வாங்காமல், அவளண்டையல்லவா போய்ச் சொல்லுகிறான் இந்தக் குமாஸ்தா! எல்லாருமல்லவா என்ன இப்படி அலட்சியப் படுத்தத் தொடங்கிவிட்டார்கள். என் வயிற்றில் பிறந்த பிள்ளைகளே என்னைச் சட்டை செய்யவில்லையென்றால், மற்றவர்கள் எங்கே மதிக்கப் போகிறார்கள்? எல்லாம் நான் கொடுத்த இடம.. எதற்கெடுத்தாலும் அவளை முன்னே கொண்டு வந்து நிறுத்திப் பேசியது எனக்கே தீம்பாகி விட்டது. உ.ம்... இருக்கட்டும்’ என்று நினைத்துக்கொண்டே எரிச்சலுடன் பின் பக்கம் போனாள்.

நிலைமையை எளிதில் ஊகித்துக்கொண்ட மங்கை, அம்மா இருந்தார்களே, பார்க்கவில்லையா? அவர்களிடம்