பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

97


“ஆமாம்; இது என்ன மூட்டை முடிச்சு? மங்கை......” என்று துணி மூட்டையை வியப்புடன் பார்த்தவாறே வினவினார் பிள்ளையவர்கள்.

மங்கையின் ஊர்ப் பிரயாணத்தை எப்படியும் நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்ட விசுவநாதன், “சித்தி ஊருக்குப் போகப் போகிருர்களாம்......அப்பா” என்று சடக்கெனச் சொன்னான்.

இதைக் கேட்டதுமே பிள்ளையவர்களின் முகம் மாறிவிட்டது. “என்ன? திடீரென ஊர்ப் பிரயாணம், மங்கை?” எனக் கேட்டவர் சில விநாடி கழித்து, ஊரிலிருந்து கடிதம் ஏதாயினும் வந்திருக்கிறதா என்ன? உன்னை வரச் சொல்லி அண்ணன் அல்லது அம்மா.....” என்று யோசனையோடு கேட்டார்.

இதுவரை மறைவிலிருந்த திலகவதிக்கு அதற்கு மேல் இருக்க முடியவில்லை.

“அண்ணன் அன்பாக அழைக்கக்கூடிய பவிசு இருந்தால் இவளைப் பிடிக்கவே முடியாது. ஆட்டுக்கு வாலை அளந்து தானே வைத்திருக்கிறான் ஆண்டவன்” என முழக்கஞ் செய்து கொண்டு இவர்கள் முன் வந்தாள்.

திலகத்தைக் கண்டதுமே எல்லோருக்கும் கிடுகிடுத்து விட்டது. இவளுடைய சுடு சொல்லைக் கேட்டு மங்கை துடி துடித்துவிட்டாள். மனங் குமுறி யழலானாள்.

திலகவதி கணவனை விரைப்பாக நோக்கி, “உங்களால் தான் இவ்வளவு தூரத்துக்கு வந்திருக்கிறது. இங்கு தன்னால் தான் எல்லாம் நடக்கிறதென்று அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள். தான் போய்விட்டால் எல்லாமே, அஸ்தமித்துப் போய்விடும் என்பது இவள் எண்ணம். அதனால்தான் ஊருக்குப் போகவேண்டும் என ஜபர்தஸ்து பண்ணுகிறாள். ‘மங்கை, போகாதே, மங்கை’ என்று நான் மண்டியிட்டுக் கேட்பேன் என அவள் மனப்பால் குடிக்கிறாள். இவள் ஜம்பம் இந்தத் திலகத்திடம் நடக்காது, தெரியுமா?”