பக்கம்:துறைமுகம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 கவிஞர் சுரதா விண்மீது வெள்ளைநிலா படுக்க, ஈர வெற்றிலையில் ஏலக்காய் படுக்க, மின்னும் கண்மீது மைபடுக்கப் புருவ மென்னும் கரைமீது வில்வந்து படுக்கப் பத்துப் பெண்மீது படுத்திருந்த குமரன், இன்றோ பெருங்காட்டில் புல்லரிசி தன்னைத் தின்று. மண்மீது படுத்தபடி வருந்த லானான். மன்னன்மகன் வாயிருந்தும் ஊமை யானான். முன்பிருந்த வீரர்களின் பெயரை யெல்லாம் முல்லைநிலத் தரைமீதில் எழுதிப் பின்னர்த் தன்பெயரை அவற்றின்கீழ் எழுதி அந்தத் தரைப்பெயரின் பட்டியலைப் படித்துப் பார்த்தான். அன்னவரின் நெடும்புகழை நினைத்துப் பார்த்தான். அவர்களொடு தன்வாழ்வை இணைத்துப் பார்த்தான். குன்றருகே கூழாங்கல் போல்நான் ஆனேன்; குளிர்மழைமுன் பனித்துளியைப் போல்நான் ஆனேன். ஏடாள வேண்டியவன் புலவன் யாழில் இசைமீட்ட வேண்டியவன் பரிசில் பாணன், வீடாள வேண்டியவள் மனைவி; நல்ல விதிவகுக்க வேண்டியவன் தலைவன் நானோ நாடாள வேண்டியவன்; எனினும் இங்கே நடமாடிக் கொண்டுள்ளேன். நினைத்துப் பார்த்தால், ஓடாத பரியாக, நிலத்திற் குள்ளே உறங்குகின்ற நீராக இருக்கின் றேன்யான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/67&oldid=924092" இலிருந்து மீள்விக்கப்பட்டது