பக்கம்:துளசி மாடம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



துளசி மாடம்

1

புதன் கிழமைக்கும் வெள்ளிக் கிழமைக்கும் நடுவில் சங்கர மங்கலம் விசுவேசுவர சர்மாவின் அந்தக் குடும்பத்தில் அப்படி என்னதான் நடந்து விட்டது? ரவி பாரிஸிலிருந்து எழுதி வியாழக்கிழமை காலையில், இங்கே கிடைத்திருந்த அந்த விமானத் தபால்-கடிதம்தான் இந்த மாறுதல்களை உண்டாக்கியிருக்க வேண்டும். கடிதத்தைப் பார்த்தபின் என்ன செய்வது என்ற மலைப்பு, இனி எப்படி நடக்கும் என்ற ஆவல், எப்படி அதற்கு ஒத்துக் கொள்வது என்ற தயக்கம், யார் யார் என்ன நினைப்பார்கள் என்ற பயம்-எல்லாம் விசுவேசுவர சர்மாவின் மனத்தைப் பற்றிக் கொண்டு உலுக்கின.

ரவியைப் பிரான்சுக்குப் போக அனுமதித்திருக்கவே வேண்டாமோ என்று தோன்றியது இப்போது வேணு மாமாவின் யோசனைப்படி ஆங்கிலப் பத்திரிகைகளில் கொடுப்பதற்கு எழுதி வைத்திருந்த 'மணமகள் தேவை' -விளம்பரத்தைக் கொடுக்கும் எண்ணம் இப்போது அவருக்கு இல்லை. அப்படி ஒரு விளம்பரம் கொடுப்பதற்கு இனிமேல் அவசியம் இருப்பதாகவும் அவருக்குத் தோன்றவில்லை. அவர் முடிவு செய்வதற்கென்று இதற்குப்பின் அவருடைய திருக்குமாரனால் எதுவும் மீதம் விடப்பட்டிருக்கவில்லை. எல்லாம் முடிந்துவிட்டது. அல்லது கைமீறிப் போயிருந்தது.

வெள்ளிக்கிழமை காலை, உள்ளூர் நியூஸ் ஏஜெண்டு பத்திரிகைக்கு வாங்கி அனுப்புவதற்காக அந்த 'மணமகள் தேவை' விளம்பரத்தை அவரிடம் வந்து கேட்டபோது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/7&oldid=1405598" இலிருந்து மீள்விக்கப்பட்டது