பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/138

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



எந்த வகை உணர்ந்தீர்?

அந்திப்பொ ழுதிலெனை வந்தணைந்தவர்-சொன்ன
அன்புமொழி எண்ணியெண்ணிப் பொங்கு முள்ளமே;-
“கந்தம் அவிழ்ந்தமலர்க் கன்னியழகை-என்றன்
கண்ணிணைகள் வீசிடவே கண்டறிந்தீரோ?
சந்தம் முரலும்வண்டின் கீதவொலியைக்- கையில்
தரித்த வளைகள் பேசக் கேட்டறிந்தீரோ?
சொந்தம் உமக்குநானென் றெந்தவகையில் இங்கு
தோன்றக் கரங்கள் ரண்டும் தொட்டிழுத்திரே?
எந்த வகையறிந்தீர் என்ன துணிவோ? - அதை
என்றனுக் கேயுரைக்க வேண்டுமென்றேனே” -
வந்துனைப் பார்க்குமுன்னர் உள்ளமிரண்டும் - மண
வாழ்வினில் ஒன்றிநின்ற உண்மை பொங்கிற்றே;
எந்த வகையுணர்ந்தேன் என்று கூறவே - எனக்
கேது மொழி?” என்றிதழில் முத்தம் நிறைந்தார்.


140