பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளமை

ஆடியெழும் நாகமதை அடிமிதிக்குங் காலம்
அளவில்லா உயர்எண்ணம் அனல் வீசுங் காலம்
தேடரிய கலையெல்லாம் நாடுகின்ற காலம்
தீஞ்சுவைசேர் கவிக்கனவில் சிறந்திருக்கும் காலம்

எண்ணவொணா இடையூற்றை எதிர்த்து நிற்குங் காலம்
எட்டாத கொம்பெனினும் ஏறஎழுங் காலம்
கண்ணிமையில் மங்கைபணி காட்டுகின்ற போதே
காலனையும் நேர் நோக்கும் கட்டிளமைக் காலம்

வெற்றியெலாம் பற்றிக்கை வீசுகின்ற காலம்
விண்ணாடாய் உலகாக்க விரும்புகின்ற காலம்
பற்றவரும் தோல்விகளைப் பயமுறுத்துங் காலம்
பண்பெல்லாம் பொங்கிளமைத் திண்காலந்தானே

தாழ்வினையும் சூதினையும் தாங்கறியாக் காலம்
தலை நிமிர்ந்து தோள்புடைத்துச் சதுர்பேசுங்காலம்
வாழ்வினிலே கசப்பேறா வளரிளமைக் காலம்
வாழியவோ வாழியதன் மாண்பெல்லாம் வாழி !

                 40